* ஆறுதல் கூட தெரிவிக்காமல் தவெகவினர் ஓட்டம்
* நிர்வாகிகள் மீது குடும்பத்தினர் பரபரப்பு புகார்
சேலம்: சேலத்தில் நடந்த விஜய் கூட்டத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த ரசிகரின் உடலை வாங்க மறுத்துஉறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி அருகே நேற்று முன்தினம் நடந்தது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு பேசினார். இதில் பங்கேற்ற விஜய் ரசிகரும் சீலநாயக்கன்பட்டி சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளியுமான சூரஜ் (34) கடும் வெயிலில் வாடி சுருண்டு விழுந்தார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சூரஜ் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனிடையே சூரஜ் இறப்பு குறித்து தவெக தலைவர் விஜய்யோ மாவட்ட நிர்வாகிகளோ இரங்கலோ, குடும்பத்தினருக்கு ஆறுதலோ கூறவில்லை. இது அவரது குடும்பத்தினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் உரிய இழப்பீடு வழங்கும் வரை அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து சூரஜின் உறவினர்கள் கூறுகையில், சூரஜிற்கு பிரியங்கா என்ற மனைவியும், 6 வயது மகன், 3 வயதில் மகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வெள்ளித்தொழிலில் ஈடுபட்டு குடும்பத்தை கவனித்து வந்த அவர், மகாராஷ்டிராவில் உள்ள பெற்றோருக்கும் மாதந்தோறும் பணம் அனுப்பி வந்தார். விஜய் கூட்டத்தில் அவர் இறந்து விட்டதால் குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறது. விஜய் கட்சி சார்பில் இதுவரை எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. இதற்கு உரிய தீர்வு, இழப்பீடு கிடைக்காமல் உடலை வாங்கி செல்வதாக இல்லை என்று தெரிவித்தனர்.
பின்னர் சூரஜ் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சிலரை மட்டும் மனு கொடுக்க உள்ளே அழைத்து சென்றனர். அங்கு மாவட்ட மேலாளர் (நீதியியல்) மாணிக்கத்தை சந்தித்து, சூரஜின் மாமனார் சம்பாஜி மனு அளித்தார். அதில், ‘‘விஜய் கட்சி மாவட்ட நிர்வாகி தமிழன்பார்த்திபன், மருத்துவமனைக்கு வந்து உங்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான உதவிகளை செய்து தருகிறோம், என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இதுவரை எந்தவித நிவாரணமும் கொடுக்கவில்லை. சூரஜ் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தவெக மத்திய மாவட்ட செயலாளர் தமிழன்பார்த்திபன் சூரஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவரது குழந்தைகளிடம், தவெக சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். குழந்தைகளின் கல்விச் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக கூறினார். சூரஜ் உடலை சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தார். இதனையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, உடலை பெற்றுச் சென்றனர்.
* நிருபர்களை தாக்கிய தவெகவினர் மீது வழக்கு
சேலத்தில் நேற்று முன்தினம் விஜய் பங்கேற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உயிரிழந்த சூரஜ் உடல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது செய்தி சேகரிக்க நின்ற நிருபர்கள் மீது மோதுவது போல் தவெக நிர்வாகிகள் சிலர் காரை ஓட்டி வந்தனர். இதனை தட்டிக்கேட்டபோது சிலர், நிருபர்களை தாக்க முயன்றனர். இதுபற்றி சென்னையைச் சேர்ந்த நிருபர் மணிவண்ணன் புகாரின்படி அன்னதானப்பட்டி போலீசார் தவெகவைச்சேர்ந்த 10பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இதேபோல விஜய் கார் கருப்பூர் சோதனை சாவடி அருகில் வந்தபோது, த.வெ.க. தொண்டர்கள் டூவீலரில் வந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்தனர். இது தொடர்பாக கருப்பூர் போலீசார் த.வெ.க. ஓமலூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜய் உள்ளிட்ட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விஜய்யின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படை பெண் இந்திராணி (40) மீது த.வெ.க. தொண்டர்கள் 2 பேர் டூவீலரில் வந்து மோதியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
