பூந்தமல்லி புறவழிச்சாலை-வடபழனி வழித்தடம் 2வது நாளாக மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

சென்னை: பெங்களூரு சிஎம்ஆர்எஸ் வட்டத்தைச் சேர்ந்த மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சவுத்ரி மற்றும் அவருடைய குழுவினர், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், வழித்தடம் 4ல் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் முதல் வடபழனி வரை 14.64 கி.மீ. நீளமுள்ள உயர்மட்ட வழித்தடத்தில் (மொத்தம் 11 மெட்ரோ நிலையங்கள் உள்பட) நேற்று முன்தினம் மற்றும் நேற்று (மொத்தம் இரண்டு நாட்களுக்கு ஆய்வு மேற்கொண்டனர்.

2ம் நாள் ஆய்வின் தொடக்கமாக, மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சவுத்ரி மற்றும் அவரது குழுவினர், இரண்டாம் கட்ட திட்டத்தில் 4வது வழித்தடத்தில் அய்யப்பன்தாங்கல் நிலையம் முதல் கட்டம் 2ல் வடபழனி மெட்ரோ நிலையம் வரை 8.50 கி.மீ. நீளத்திற்கு நேற்று ஆய்வு செய்தனர்.

மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையருடன் 3 பாதுகாப்பு துணை ஆணையர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் அர்ச்சுனன் (திட்டங்கள்), மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் ஆய்வில் கலந்து கொண்டனர்.

மெட்ரோ ரயில் இறுதி வேக சோதனை ஆய்வு பிப்ரவரி, 2026 மூன்றாவது வார இறுதியில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழித்தடம் 4ல் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைக்கு முன்னுரிமை அளித்து, இடைப்பட்ட நிறுத்தங்கள் ஏதுமின்றி, போரூர் சந்திப்பிலிருந்து வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவைகளை நீட்டிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Related Stories: