திருவாரூர்: திருவாரூர் கலைஞர் கோட்ட நூலகத்தில் படித்து கொண்டிருந்த மாணவரிடம் என்னை ஏன் பிடிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டார். அதற்கு நீங்கள் கல்விக்காகவும், மாணவர்களுக்காவும் அதிக திட்டங்களை செயல்படுத்தி வருவதால் பிடிக்கும் என தெரிவித்தார். உடனே முதல்வர் மாணவரை நன்றாக படித்து உயர் பதவிக்கு வர வேண்டும் என வாழ்த்தினார். சட்டமன்ற தேர்தலையொட்டி, கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று துவக்கினார்.
இதற்காக முதல்வர் தனி விமானத்தில் சென்னையிலிருந்து தஞ்சாவூர் ராணுவ விமானபடை மைதானத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருவாரூருக்கு காலை 10.45 மணியளவில் வந்தார். காட்டூரில் உள்ள கலைஞரின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மனைவி துர்கா ஸ்டாலினுடன் சேர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள கலைஞர் கோட்டத்திற்கு சென்ற முதல்வர், அங்குள்ள கலைஞரின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றினை குறிக்கும் வகையில் தயாளு அம்மையார் அறக்கட்டளை மூலம் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு சுமார் ஒரு மணி நேரம் வரை பார்வையிட்டார். அப்போது அங்கு நூலகத்தில் படித்து கொண்டிருந்த திருக்கண்ணமங்கை கிராமத்தை சேர்ந்த இளவரசன் மகன் சிவதர்ஷனிடம் (12) என்ன படிக்கிறாய், எங்கு படிக்கிறாய், புத்தகம் படிப்பது பிடிக்குமா என முதல்வர் கேட்டறிந்தார். அப்போது அந்த சிறுவன், 7ம் வகுப்பு படித்து வருகிறேன்.
விடுமுறை தினங்களில் இந்த நூலகத்திற்கு வந்து செல்வேன். புத்தகம் படிப்பதும் பிடிக்கும், உங்களையும் ரொம்பவும் பிடிக்கும் என தெரிவித்தார். அப்போது முதல்வர், ஏன் என்னை பிடிக்கும் என மாணவரிடம் கேட்ட போது, நீங்கள் கல்விக்காகவும், மாணவர்களுக்காவும் அதிக திட்டங்களை செயல்படுத்தி வருவதால் பிடிக்கும் என தெரிவித்தார். நன்றாக படித்து உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என முதல்வர், மாணவருக்கு அறிவுரை வழங்கினார்.
இதே போல் நூலகத்தில் படித்துகொண்டிருந்த விளமல் பகுதியை சேர்ந்த ஜெயலெட்சுமி, தினந்தோறும் இந்த நூலகத்திற்கு வந்து புத்தகங்களை படித்து செல்கிறேன். எனது மகன் விக்னேஷ், அரசு பணி போட்டி தேர்விற்காக இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகிறார். அவர் தேர்வில் வெற்றி பெற்று உங்களது (முதல்வர் மு.க.ஸ்டாலின்) கையால் பணி ஆணை பெற வேண்டும் என்று தெரிவிப்பதாக முதல்வரிடம் கூறினார்.
அப்போது அவருக்கும், மகன் விக்னேஷிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக முதல்வர் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து சன்னதி தெரு இல்லத்திற்கு புறப்பட்டபோது வழியில் பனகல் சாலையில் அழகிரி நகர் அருகே முதல்வரை பொதுமக்கள் வரவேற்றனர். அப்போது அங்கு குழந்தைக்கு சாக்லேட் வழங்கி முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.
