கள்ளக்குறிச்சி தொகுதிக்கு சீட் தராததால் மனஉளைச்சல் மேடையில் விழுந்து கும்பிட்டு அதிமுக நிர்வாகி ராஜினாமா

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சிட்டிங் எம்எல்ஏ செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் பிரபு, அழகுவேலுபாபு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜிவ்காந்தி உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜிவ்காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சியில் மாவட்ட செயலாளரும், உளுந்தூர்பேட்டை அதிமுக வேட்பாளருமான குமரகுரு தலைமையில் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் மோகன், சிட்டிங் எம்எல்ஏ செந்தில்குமார், முன்னாள் எம்பி காமராஜ், முன்னாள் எம்எல்ஏ பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாமக, பாஜ, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகள் குறித்து உரையாற்றினார்.

அப்போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ அழகுவேலுவின் கணவரும் கள்ளக்குறிச்சி அதிமுக நகர செயலாளருமான பாபுவை பேச அழைத்தனர். அவர் மைக் முன் நின்று, ‘‘நான் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வருகிறேன். இருந்தாலும் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தே ஆகனும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டேன். மனநிலை சரியில்லாமல் இருந்து வருகிறன். நான் இங்கு வந்த நோக்கம் கட்சி வெற்றிபெற வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் இனிமேலும் தொடர்ந்து அதிமுக நகர செயலாளர் பதவியில் இருந்து பணியாற்றும் மனநிலையில் இல்லை, என உடல் நிலையும் சரியில்லை. எனக்காக உழைத்து என்னோடு பணியாற்றிய உங்கள் அனைவருக்கும் பொற்பாதங்களை தொட்டு வணங்கி நன்றி கூறுகிறேன். தம்பி ராஜிவ்காந்தி வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ ’’ என கூறி கண்ணீர் விட்டபடி கையெடுத்து கும்பிட்டார். பின்னர் கையில் வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுருவிடம் வழங்கிவிட்டு மேடையின் நடு பகுதியில் நிர்வாகிகள் முன்னிலையில் கையெடுத்து கும்பிட்டு, தொண்டர்கள் முன் தரையில் விழுந்து வணங்கினார்.

பின்னர் மேடையில் இருந்து சோகமாக கீழே இறங்கி, கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாபு அளித்த ராஜினாமா கடிதத்தில், ‘‘கள்ளக்குறிச்சி நகர செயலாளர் ஆகிய நானும் எனது மனைவி மாவட்ட மகளிர் அணி தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அழகுவேலுபாபுவும் பல்வேறு மனஉளைச்சல் காரணமாக கழக பணியாற்றிட இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இதனால், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் முழுமையாக விலகுகிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

* குத்தாலத்திலும் ஒரு நிர்வாகி விலகல் மாஜி அமைச்சர் மீது குற்றச்சாட்டு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திற்குட்பட்ட வழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன். பாரம்பரிய அதிமுக குடும்பத்தை சேர்ந்த இவரது தந்தை அதிமுகவில் 1972 முதல் பணியாற்றிய நிலையில் தனது 18வயதில் இருந்து கிளை செயலாளராக அதிமுகவில் படிப்படியாக உயர்ந்து பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்தவர். 2021ம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பேற்றவர்.

எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் 6 மாதத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து கட்சியில் அவமரியாதை செய்யப்பட்டதால் அதிமுக கூட்டத்திற்கு செல்வதை செந்தில்நாதன் தவிர்த்து வந்தார். செந்தில்நாதனுக்கு தேர்தலில் எம்எல்ஏ சீட்டு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி மீண்டும், குத்தாலத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மயிலாடுதுறை தொகுதி, கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது.

இதனால், ஆதிருப்தியடைந்த செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் இணைந்து பழி வாங்கும் நோக்கத்தில் செயல்படுவதால் குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், ‘‘முதலமைச்சர் ஆகலாம் என்ற கனவில் இருந்த ஓ.எஸ்.மணியன், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக கூடாது என்ற நோக்கில் டெல்டா மாவட்டங்களில் தோல்வியை தழுவும் வேட்பாளர்களை நியமித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட செயலாளர் மற்றும் பவுன்ராஜ் ஆகியோரால் கட்சியில் இருந்து மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டுப்பட்டுள்ளனர். அதிமுக ரத்தம் உடம்பில் ஓடும் எண்ணை போன்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காமல் அவமரியாதை செய்வதை பொதுச்செயலாளர் தெரியப்படுத்தவே பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories: