நெல்லை மண்டல துணை இயக்குநர் சரவணபாபுவுடன் லஞ்ச வழக்கில் சிக்கிய தீயணைப்பு வீரர் செந்தில்குமாருக்கு ரூ.20 கோடி சொத்து: ஒரு வருடத்திற்குள் ரூ.70 லட்சம் வரை பண பரிவர்த்தனை

* லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

மதுரை: நெல்லை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு உடன் லஞ்ச வழக்கில் சிக்கிய தீயணைப்பு வீரர் செந்தில்குமாருக்கு 20 கோடி மதிப்பிலான சொத்துகள் மற்றும் 3 வங்கி கணக்குகளுக்கும் இருப்பது லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஒரு வருட காலத்திற்குள் சுமார் ரூ.70 லட்சம் வரைக்கும் பண பரிவர்த்தனை நடந்துள்ளது என்று லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

திருநெல்வேலி மண்டல துணை இயக்குநர் சரவணபாபு உடன் லஞ்ச வழக்கில் சிக்கிய தீயணைப்பு வீரர் செந்தில்குமார் என்பவர் லஞ்ச வழக்கினை சிபிஐ மாற்றக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் அதன் மீது நடந்த முதல் விசாரணையிலேயே நீதிபதி துணை இயக்குநர் சரவணபாபு மற்றும் தீயணைப்பு வீரர் செந்தில்குமாரின் சொத்து விபரங்களை விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது.

அந்த அறிக்கையின்படி ஒரு சாதாரண தீயணைப்பு வீரர் செந்தில்குமாருக்கு சுமார் ரூ.7 கோடி மதிப்புள்ள, அவரது குடியிருக்கும் வீடு உட்பட தூத்துக்குடி மாநகரத்திற்குள் பல இடங்களில் ரூ.20 கோடி மதிப்பிலான 11 சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். குறைவான சம்பளம் பெறும் தீயணைப்பு வீரர் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி உட்பட 3 வங்கி கணக்குகளுக்கும் ஒரு வருட காலத்திற்குள் சுமார் ரூ.70 லட்சம் வரைக்கும் பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இந்த வங்கி கணக்குகளில் நெல்லை மண்டலத்தின் பல முன்னனி நிறுவனங்கள் தீயணைப்பு சான்றுக்காக நேரடியாக லஞ்ச பணத்தினை அனுப்பியுள்ளனர்.

இவரது சொத்துக்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் மதிப்பிட்டதில் இவரது சொத்து மதிப்பு சுமார் 500 சதவீதம் வரை வருமானத்திற்கு அதிகமாக உள்ளது என்று ஆதாரபூர்வமான அறிக்கையை நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ளனர்.  இந்த தீயணைப்பு வீரர் செந்தில்குமார் 2002ல் தீயணைப்பு பணிக்கு சேர்ந்தது முதல் இதுநாள் வரையிலும் தனக்கு பதவி உயர்வே வேண்டாம் என எழுதி கொடுத்து இந்த நெல்லை மண்டலத்திலேயே தொடர்ச்சியாக பல வருடங்களாக தீயணைக்கும் பணியை தவிர்த்து துணை போன்ற உயர் அலுவலர்களுக்கு லஞ்ச பணம் பெற்று தரும் வசூல் ஏஜெண்ட் பணியை மட்டும் தான் செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

மேலும் துணை இயக்குநர் சரவணபாபுவின் சொத்துக்களுக்கு பினாமியாகவும் இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவர் 2018ம் ஆண்டு தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்தில் எழுத்தராக பணியாற்றிய போது மாநகர தனியார் பள்ளி ஒன்றில் தடையின்மைச் சான்றுக்கு லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்ததால் அப்போதைய தீயணைப்புத்துறை இயக்குநரால் தேனி மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அந்த உத்தரவை மதிக்காமல் மதுரை உயர் நீதிமன்றத்தை அணுகி அந்த ஆணையை ரத்து செய்து தொடர்ந்து தூத்துக்குடியிலேயே பணிபுரிந்து வந்தார்.

இதே தவறுகளை தொடர்ச்சியாக செய்து வந்த செந்தில்குமாரை 2022ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட அலுவலராக இருந்த குமார் என்பவர் கண்டித்ததால் போலியான விண்ணப்பதாரரை வைத்து மாவட்ட அலுவலர் குமாருக்கு லஞ்சம் கொடுத்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்க வைக்க திட்டம் தீட்டியதை மாவட்ட அலுவலர் குமார் கண்டுபிடித்து தீயணைப்பாளர் செந்தில்குமாருக்கு குற்றக்குறிப்பாணை வழங்கியதை மீண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ரத்து செய்தார்.

இந்நிலையில் தற்போது துணை இயக்குநர் சரவணபாபுவுடன் சிக்கிய லஞ்ச வழக்கிலும் இவருக்கு எதிரான ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை பரிந்துரையின்படி முதல்நிலை குற்றவாளியான சரவணபாபுவின் நிர்வாக மாவட்டங்களை தவிர்த்து இயக்குநரால் சென்னை மண்டலத்திற்கு பணியிடம் மாற்றம் செய்த உத்தரவையும் மீண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகி சரவணபாபு நிர்வாகத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கே மாறுதல் வாங்கியுள்ளார்.

தற்போது இவர் துறைக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகிய தான் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலக கோப்புகள் அனைத்தையும் சரவணபாபு உடன் சேர்ந்து மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என லஞ்ச ஒழிப்புத்துறை கருதுவதாக கூறப்படுகிறது. இது குறித்து தீயணைப்புத்துறைக்கு அவரை மாற்றும்படி அறிக்கை அளிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related Stories: