தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமல்: காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்

சென்னை: தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இதனால் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர வாய்ப்புள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாட்டின் முக்கிய சாலைகளின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களிடமிருந்து சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படுகிறது. பல தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டுத்திட்ட முறையில் செயல்படுத்தப்படுவதால், சுங்கச்சாவடிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்படுகின்றன.

அந்த ஒப்பந்தத்தின் படி, குறிப்பிட்ட காலத்திற்கு வாகனங்களிடமிருந்து சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. சுங்கச்சாவடிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 77 சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு உயர்த்தப்படுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் போக்குவரத்து அளவு, சாலை பராமரிப்பு செலவு, பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும். மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டண உயர்வு காலமும் மாறுபடுகிறது. 1992ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அதேபோல் 2008ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்தில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் நள்ளிரவு முதல் 60 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி கார், ஜீப், வேன், லைட் கமர்ஷியல் வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு மாநிலம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மேலும் சுங்கச்சாவடிகளில் கார், ஜீப், வேன் போன்ற லேசான வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட ரூ.10 முதல் ரூ.40 வரையும், லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.300 முதல் ரூ.350 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி மொரட்டாண்டி, பல்லிக்கொண்டா, பெடகல்லுப்பள்ளி (வாணியம்பாடி), கானியூர், கிருஷ்ணகிரி, பரனூர், ஆத்தூர் (திண்டிவனம்), மாதூர், நல்லூர், சூரப்பட்டு, வானகரம், ஸ்ரீபெரும்புதூர் (பென்னலூர்), சென்னசமுத்திரம், எஸ்.வி.புரம், பட்டறைப்பெரும்புதூர், கல்லக்குடி, மணகத்தி, குருங்குடி (வீராணநல்லூர்), நாங்கிலிகொண்டான், காரியமங்கலம், நாகம்பட்டி, கோத்தட்டை, கரகத்தஹள்ளி, கங்காரம்பாளையம், செலியமேடு, கீழ்குப்பம், பொன்னாலகரம், வள்ளம், ஏனம்காரியந்தல், தென்னமாதேவி, கதவாணி, வேலம்பட்டி, மதுக்கரை, எச். புதுப்பட்டி, பொங்கலூர், வலவந்தாங்கோட்டை, கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர், நாங்குநேரி, பூதகுடி (விராலிமலை), சிட்டம்பட்டி (மேலூர்), லெச்சுமணப்பட்டி, லெம்பலகுடி, கோடிக்கோட்டை, வெண்ணாத்தூர், பழைய கந்தர்வக்கோட்டை, செண்பகம்பேட்டை, திருப்பாச்சேதி வடக்கு, போகலூர், வாகைக்குளம், திருப்பதிசாரம், உப்பார்பட்டி, சத்திரப்பட்டி, புதூர், கோவில்வேணி, வெம்புக்குடி, மணம்பாடி, புதூர்பாண்டியபுரம், எலியார்பதி, வலவந்தாங்கோட்டை ஆகிய 60 சுங்கச்சாவடிகள் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால் காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளது.

Related Stories: