தாம்பரம், பிப்.10: தாம்பரம் அருகே விபத்தில் சிக்கிய சொகுசு காரை, போலீசார் விரைந்து அகற்றாததால் ஜிஎஸ்டி சாலையில் 5 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி சொகுசு கார் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர், முன்னாள் சென்ற அரசு பேருந்தின் பின்புறம் வேகமாக மோதினார். இதில் காரில் இருந்த ஏர்பேக் வெளியே வந்ததால் ஓட்டுனர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில், விபத்தில் சிக்கிய கார் சாலையின் நடுவே நின்றதால், அதனை அப்புறபடுத்த போலீசார் வராததால் ஜிஎஸ்டி சாலையில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பேருந்துகளுக்காக காத்திருந்தவர்கள், வேலைக்கு செல்பர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பின்னர் மிகவும் தாமதாக வந்த போக்குவரத்து போலீசார், காரை அப்புறபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். அதன் பின்னர் மெல்ல மெல்ல போக்குவரத்து நெரிசல் சீரானது, போக்குவரத்து போலீசாரின் மெத்தனமான பணியினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியதோடு புலம்பிக்கொண்டே அவரவர் செல்லும் இடங்களுக்கு சென்றனர்.
