சென்னை, ஜன.28: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய சைக்கிள் சம்மேளனம், தமிழ்நாடு சைக்கிள் சங்கம் ஆகியவை இணைந்து ஆசிய கோப்பை 2026, சைக்கிள் ஓட்டம் போட்டிகளை, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள மேலக்கோட்டையூரில் நாளை (29ம் தேதி) முதல் 31ம் தேதி வரை 3 நாட்கள் நடத்துகிறது. இந்த போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த ஆசிய சைக்கிள் போட்டிகளில் கலந்துகொள்ள மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், பிலிப்பைன்ஸ், மியான்மர், லிதுவேனியா, நேபாளம், மாலத்தீவு உள்ளிட்ட 11 வெளிநாடுகளில் இருந்து, 120க்கும் அதிகமான வெளிநாட்டு சைக்கிள் போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
அவர்கள் விமானங்கள் மூலம், நேற்று மாலையில் இருந்து தனித்தனி பயணிகள் விமானங்களில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். இவர்களோடு 15 தமிழ்நாட்டு வீரர்கள் உள்பட 30 இந்திய வீரர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இந்த சைக்கிள் போட்டிகளில் கலந்து கொள்பவர்களில் பெண் வீராங்கனைகளும் உள்ளனர். அந்த சைக்கிள் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு, சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்பு அந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும், சென்னை நகரில் உள்ள பல்வேறு, நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
