சென்னை, ஜன.30: சிறுமி பலாத்கார வழக்கில் 2 ஆண்டுகளாக தேடப்பட்ட போக்சோ குற்றவாளி, சவுதி அரேபியாவுக்கு தப்ப முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தஞ்சாவூரை சேர்ந்தவர் இப்ராஹிம் பக்கீர் முகமது (45). கடந்த 2024ம் ஆண்டு, சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவானார். இதையடுத்து, தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ வழக்கு பதிந்து இப்ராஹிம் பக்கீர் முகமதுவை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, இப்ராஹிம் பக்கீர் முகமது வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், இப்ராஹிம் பக்கீர் முகமதுவை, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், சென்னையில் இருந்து சார்ஜா செல்லும் ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த, பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்து பயணிகளை விமானத்திற்கு அனுப்பினர்.
அப்போது அந்த விமானத்தில், சார்ஜா வழியாக, சவுதி அரேபியாவுக்கு தப்பிச் செல்வதற்காக தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் தேடப்பட்டு வரும் போக்சோ வழக்கு தலைமறைவு குற்றவாளியான இப்ராஹிம் பக்கீர் முகமதுவும் பயணம் செய்ய வந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள், தஞ்சாவூர் போலீசாரால் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது. பின்னர், குடியுரிமை அதிகாரிகள் இப்ராஹிம் பக்கீர் முகமதுவை சுற்றி வளைத்து பிடித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தஞ்சாவூரில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்து, இப்ராஹிம் பக்கீர் முகமதுவை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர். தஞ்சாவூர் போலீசாரால் தேடப்பட்டு வந்த போக்சோ வழக்கு தலைமறைவு குற்றவாளி சவுதி அரேபியா நாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
