பிராட்வே பகுதியில் ரூ.823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, ஜன.30: பிராட்வே பகுதியில் ரூ.823 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி சார்பில், பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்க சாலை பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த 1960ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1964ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பிராட்வே பேருந்து நிலையமானது வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கான உபயோகத்திற்கு வந்தது. காலப்போக்கில் இப்பேருந்து நிலையத்தில் பல்வேறு கடைகள் அமைந்தன. சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் இப்பேருந்து நிலையம் அமைந்துள்ளதாலும், மக்கள் தொகை பெருக்கத்தினாலும், இடநெருக்கடி ஏற்பட்டது.

இதனால், வெளியூர் செல்லும் பேருந்துகள் 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர், பிராட்வே பேருந்து நிலையம் மாநகரப் பேருந்துகளுக்கான நிலையமாக மாற்றப்பட்டது. பிராட்வே பேருந்து நிலையத்தில் சிறுகடைகள் அதிகமாக உள்ளதாலும், இடநெருக்கடியாலும், இப்பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் 2022-23ம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்திலும் பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் அமைக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் பிராட்வே பேருந்து நிலையத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடம் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். பிரிவு 1- இத்திட்டத்தின் மொத்த பரப்பளவு 1.08,290 சதுர மீட்டர் ஆகும். இதில் 2 அடித்தளங்கள் ஒரு தரைத்தளம் மற்றும் 8 மேல் தளங்கள் கொண்டதாகும். பயணிகள் நேரடியாக உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையம், என்எஸ்சி போஸ் சாலை, எஸ்பிளனேடு சாலை மற்றும் டிஎன்பிஎஸ்சி சாலை நுழைவு மற்றும் வெளியேற்று அமைப்பு வழியாக பேருந்து நிலையம் முதல் அடித்தளத்தில் அமைந்துள்ள பயணிகள் கூடத்தின் வழியாக தரை மற்றும் முதல் பேருந்து நிலையங்களுக்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் யணிகளுக்கும், பேருந்துகளுக்கும் ஏற்படும் இடையூறுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். 2வது அடித்தளம் கார் நிறுத்துமிடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2 அடுக்கு கார் நிறுத்துமிடம் அமைய உள்ளது. தரை மற்றும் முதல் தளம் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2வது முதல் 8வது தளங்கள் வரை அலுவலக பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. பிரிவு 2- 22,794 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட குறளகம் கட்டிடம் 2 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 9 மேல்தளங்களை கொண்ட கட்டிடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் அடித்தளத்தில் இருந்து பயணிகளை எம்எம்எப்சி கட்டிடத்தின் பயணிகள் கூடத்திற்கும், கார் நிறுத்துமிடத்திற்கும் நேரடியாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2வது அடித்தளத்தில் 2 அடுக்கு கார் நிறுத்துமிடமும், தரைத்தளம் முதல் 2ம் தளம் வரை சில்லறை வணிக வளாகங்கள் அமைக்கப்பட உள்ளது. 3ம் தளம் முதல் 9ம் தளம் வரை அலுவலகப் பயன்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பிரிவு 3- ஒரு அடித்தளம் மற்றும் ஒரு தரைத் தளத்தை கொண்ட துணை போக்குவரத்து நுழைவு கட்டிடமும் இந்த திட்டத்தில் ஒரு பகுதியாகும். இது மெட்ரோ செயல்பாட்டு கட்டமைப்புகளை, குறிப்பாக நுழைவு / வெளியேறும் கட்டமைப்புகளை உள்ளடக்கியது. இது பேருந்து முனையத்தின் இணைப்பு மண்டலத்தை என்எஸ்சி போஸ் சாலையில் அமைந்துள்ள பயணிகள் கூடத்துடன் இணைக்கிறது. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, துணை மேயர் மு.மகேஷ்குமார், சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: