பீகார் வாலிபர், மனைவி, குழந்தை கொலை பெருங்குடி குப்பை கிடங்கில் 2வது நாளாக இளம்பெண் உடலை தேடும் பணி தீவிரம்: 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

சென்னை, ஜன.30: பீகார் வாலிபர், மனைவி, குழந்தை கொலை வழக்கில், பெருங்குடி குப்பை கிடங்கில் 2வது நாளாக இளம்பெண்ணின் உடலை தேடும் பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூ சாலை சந்திப்பில் கடந்த 26ம் தேதி காலை சாலை ஓரத்தில், ரத்தம் வழிந்த நிலையில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக அடையாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது 24 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் பலத்த வெட்டு காயங்களுடன் சாக்கு மூட்டையில் இறந்து கிடந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து வடமாநில வாலிபரை கொலை செய்து இந்த இடத்தில் சாக்கு மூட்டையில் உடலை கொண்டு வந்து வீசி சென்றது யார் என்பது குறித்து 5 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அந்த சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனை செய்தபோது, 2 வாலிபர்கள் வாகனத்தில் வந்து அந்த சாக்கு மூட்டையை வீசி சென்றது பதிவாகி இருந்தது. அந்த காட்சியை வைத்து 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ்குமார் (24) என்பதும், இவர் தனது மனைவி புனிதாகுமாரி மற்றும் 2 வயது குழந்தை உடன் வேலை தேடி சென்னை வந்து தனது உறவினர் சிக்கந்தர் என்பவரிடம் வேலை கேட்டதும், இதனை அடுத்து சிக்கந்தர் நாங்கள் தங்கியிருக்கும் தரமணி பாலிடெக்னிக் வளாகத்தில் இடம் இருப்பதாக கூறி 24ம் தேதி குடும்பத்துடன் அழைத்துச் சென்று தங்க வைத்ததும் தெரிந்தது.

பின்னர் அன்று இரவு சிக்கந்தர் தன்னுடன் வேலை செய்யும் நரேந்திர குமார் (45), ரவீந்திரநாத் தாகூர் (45), பிகாஸ் (24) உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து கவுரவ் குமாரின் மனைவி புனிதா குமாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த கவுரவ் குமார் எழுந்து பார்த்து, இதனை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இந்த சம்பவம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக கவுரவ்குமார், அவரது மனைவி புனிதா குமாரி மற்றும் 2 வயது கைக்குழந்தை ஆகிய மூன்று பேரையும் கொலை செய்து உடல்களை சாக்கு மூட்டையில் கட்டி குழந்தையின் உடலை கூவம் ஆற்றிலும், கவுரவ்குமார் உடலை அடையாறு இந்திரா நகர் சாலை ஓரத்திலும், புனிதா உடலை அங்குள்ள குப்பை தொட்டியிலும் வீசி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் மத்திய கைலாஷ் கூவம் ஆற்றில் இருந்து குழந்தை உடலை நேற்று முன்தினம் மீட்டனர். மேலும் புனிதா குமாரி உடல் தரமணியில் உள்ள குப்பை தொட்டியில் போட்டதால் அங்கிருந்து சேகரிக்கப்பட்ட குப்பை உடன் வந்த உடல் லாரி மூலம் பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டிருக்கும் என போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து அடையாறு மற்றும் துரைப்பாக்கம் போலீசார் பெருங்குடி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் பெண்ணின் உடலை தேடினர். உடல் கிடைக்காததால் 2வது நாளான நேற்றும் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாநகராட்சி ஊழியர்கள் 30 பேர், ஆயுதபடை போலீசார் 100க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டு, பொக்லைன் இயந்திரம் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: