முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் முன்னாள் ராணுவ வீரர் கைது: விருதுநகரில் சுற்றிவளைப்பு

சென்னை, ஜன.28: முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 25ம் தேதி இரவு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தமிழக முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறையில் உள்ள போலீசார் தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி, போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் முதல்வர் வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் எந்த வெடிபொருளும் சிக்கவில்லை. இதையடுத்து குண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விருதுநகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாலமுருகன் (43) என்று தெரியவந்தது. மேலும் அவர் குடிபோதையில் குண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து விருதுநகர் போலீசார் உதவியுடன் பாலமுருகனை தேனாம்ேபட்டை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், பாலமுருகன் வீட்டின் அருகே பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்க்கும் பழக்கம் உடையவர் என்றும், இவர் மீது பெண் ஒருவர் அளித்த புகாரில் மல்லி காவல் நிலையம் போலீசார் பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்ததும் தெரியவந்தது. மேலும் பாலமுருகனின் தவறான பழக்கத்தால் அவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டதும் தெரியவந்தது.

Related Stories: