வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற தொன்மையான சிலைகள் மீட்பு : 4 பேர் கைது

சென்னை, பிப்.11: சிலை திருட்டு தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் தஞ்சாவூர் சரக உதவி ஆய்வாளர் தண்டாயுதபாணி தனிப்படையினருடன் கடந்த 6ம் தேதி சென்னை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வலையபேட்டை காலி திடல் அருகில் வாகன தணிக்கையின்போது, சாலை ஓரத்தில் கார் நின்றிருந்ததை கண்டனர். அதை சோதனை செய்த போது, சாக்குபையில் 2 சிலைகள் இருப்பது தெரிந்தது. தொன்மையான மற்றும் அரிதான சுதர்சனர் என்கிற விஷ்ணு சிலை 77.300 கிலோ எடை, 90 செ.மீ உயரம் மற்றும் 48 செ.மீ அகலமும் முன் கைகளில் இரண்டு விரல்களும் தலையில் தீ ஜீவாலையில் ஒரு பகுதி பின்னப்பட்டும் இருந்தது. பெண் தெய்வம் தேவி 35.450 கிலோ எடையும், 73 செ.மீ உயரமும் 31 செ.மீ அகலமும் இருந்தது.

இதையடுத்து, அந்த காரின் ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபரான மணிகண்டன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரிடம் விசாரித்த போது, இந்த 2 சிலைகளும் திருடப்பட்டவை என்பதும், அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி பெருந்தொகைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலறின் பேரில், முகிலன் மற்றும் ஜான்சன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இந்த சிலைகள் 14-15ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசின் காலத்தை சேர்ந்தது, என தெரிந்தது. வழக்கின் புலன் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: