சென்னை, பிப்.4: பள்ளி மாணவியை உல்லாசத்திற்கு அழைத்த ஆயுதப்படை பெண் காவலரின் கணவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தி.நகரை சேர்ந்தவர் இந்துமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அதில், எனது மகள் அருகில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு தினமும் செல்லும் போது, எதிர் வீட்டில் வசித்து வரும் பூபாலன் (33) என்பவர், எனது மகளிடம் பேசி பழகி வந்துள்ளார். எனது மகளும், எதிர்வீட்டை சேர்ந்தவர் என்பதால் பேசி வந்தாள்.
இதற்கிடையே நேற்று முன்தினம் எனது மகள், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த போது, பூபாலன் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து, எனது மகளை பார்த்து கை அசைத்துள்ளார். இதை கவனித்த எனது மகள், பதிலுக்கு கையசைத்தாள். உடனே பூபாலன், ‘பறக்கும் முத்தம்’ கொடுத்து அதற்கு ரிப்லே செய்ய கூறியுள்ளார். அதோடு இல்லாமல் எனது மகளுக்கு தொடர்ந்து பறக்கும் முத்தம் கொடுத்தப்படி, உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
இதை சற்றும் எதிர்ப்பார்க்காத எனது மகள், அதிர்ச்சியடைந்து என்னிடம் இதுபற்றி கூறி அழுதாள். எனவே எனது மகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வரும் பூபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி இருந்தார்.
அதன்பேரில், மகளிர் போலீசார் பூபாலனை படித்து விசாரணை நடத்திய போது, பூபாலன் தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் பணியாற்றி வருவதும், சென்னை ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவரை ஒரு வருடம் காதலித்து, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ததும் தெரியவந்தது. தனது காதல் மனைவிக்கு தெரியாமல், 10ம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை விரித்து உல்லாசத்திற்கு அழைத்ததும் உறுதியானது.
அதைதொடர்ந்து பெண் காவலரின் கணவன் பூபாலன் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பல மாதங்கள் பின் தொடர்ந்து தன்னை காதலித்து திருமணம் செய்த கணவன் போக்சோ சட்டத்தில் கைது ெசய்யப்பட்ட சம்பவத்தால் பெண் காவலர் மனமுடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
