வார இறுதி நாட்களையொட்டி 725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை, பிப்.5: வார இறுதி நாளையொட்டி 725 சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வார விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள ஏதுவாக, போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்தவகையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 240 பேருந்துகளும், நாளை மறுநாள் 255 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 பேருந்துகளும், நாளை மறுநாள் 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 20 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த சிறப்பு பேருந்து பயணம் மேற்கொள்ள நாளை 8,197 பயணிகளும், நாளை மறுநாள் 3,920 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை 9,204 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: