3,44,940 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் சுகாதார அலுவலர் தகவல் செய்யாறு சுகாதார மாவட்டத்தில் இன்று

செய்யாறு, பிப். 10: செய்யாறு சுகாதார மாவட்டம் சுகாதார அலுவலர் என். சதீஷ்குமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இன்று 10ம் தேதி செய்யாறு சுகாதார மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் விடுபட்டவர்களுக்கு வருகிற 17ம் தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இம்முகாமில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 2,67,034 பயனாளிகளுக்கும் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 77,906 மகளிர்களுக்கும் மொத்தம் 3,44,940 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. குடற்புழு நீக்க மாத்திரைகள் ரத்த சோகை வராமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. இம்முகாம் செய்யாறு சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட ஆரணி, மேற்கு ஆரணி, செய்யாறு, வந்தவாசி, தெள்ளாறு, பெரணமல்லூர், வெம்பாக்கம் அனக்காவூர் ஆகிய 8 வட்டாரங்கள் மற்றும் ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய நகராட்சிகளிலும் நடைபெறுகிறது.

44 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 171 துணை சுகாதார நிலையங்கள், 35 கல்லூரிகள் 864 அரசு பள்ளிகள், 55 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 124 தனியார் பள்ளிகள், 855 அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 2,158 இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இம்முகாமில் 8 நடமாடும் மருத்துவமனை ஊர்திகள், 16 ஆர்.பி.எஸ்.கே. ஊர்திகள், 8 மக்களை தேடி மருத்துவ ஊர்திகள் மற்றும் 855 அங்கன்வாடி பணியாளர்கள், 267 சுகாதாரத்துறை பணியாளர்கள், 81 மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று முகாம் நடைபெற உள்ளது. எனவே 1 வயது முதல் 19 வயது வரை மற்றும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள (மகளிர்) பயனாளிகள் யாவரும் குடற்புழு நீக்க மாத்திரைகள் பெற்று பயனடைவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: