பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் மறியல்

தர்மபுரி, பிப்.3: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். மாநில தலைவர் பழனியம்மாள் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் புகழேந்தி, மாவட்ட இணை செயலாளர் இளவேனில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் காவேரி, தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட 128 பெண்கள் உள்பட 158 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அகவிலைப்படி சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 5068 பேருக்கு வழங்கப்பட்ட குற்றகுறிப்பானை 17-பி ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறைஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். ஆனால்தங்களது கோரிக்கையை  நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என  கூறி தொடர்ந்து நேற்று இரவு வரை மண்டபத்தில் உள்ளிருப்பு  போராட்டத்தில்அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: