சொன்னாரு: தமிழக சட்டமன்ற வரலாற்றில் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்படமாட்டாது. அதற்கு பதிலாக பொது பட்ஜெட்டிலேயே ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டு வந்தன. ஆனால்,கடந்த 2021ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் ‘தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக விவசாயத்திற்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
செஞ்சாரு: விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘தனி பட்ஜெட்’ என்ற நடைமுறையை கொண்டு வந்து கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி சட்டமன்றத்தில் விவசாயிகளுக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய சரித்திர சாதனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு படைத்தது. முன்பு கொள்கை முடிவுகளை பெரும்பாலும் அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நிலையில் தற்போதைய தனி பட்ஜெட் முறையில் பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கான திட்டங்களை உருவாக்கி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த தனி பட்ஜெட் கொண்டு வர முக்கிய நோக்கமாக பார்க்கப்படுவது விவசாயத்தை வெறும் வாழ்வாதாரமாகப் பார்க்காமல், அதை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றி விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதாகும். இந்த பட்ஜெட் மூலம் நீர்பாசனம், கால்நடை, கூட்டுறவு அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வரப்படுதல், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக மாற்றுவது, இயற்கை விவசாயத்திற்கு தனி முக்கியத்துவம், நிலத்தடி நீர் மேலாண்மை போன்றவற்றை இலக்காக கொண்டு அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
இதுமட்டுமின்றி, ‘வேளாண்மை என்பது வெறும் சாகுபடி சார்ந்தது மட்டுமல்லாது, அதை செய்யும் விவசாயிகளின் நலனையும் உள்ளடக்கியது’ என்பதை வலியுறுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே ஆளுநர் உரையில் வேளான்மை துறை என இருந்ததை ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’ என பெயர் மாற்ற செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உடனடி செயல்பாட்டிற்கு வந்தது. இந்த தனி பட்ஜெட் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது விவசாயத்திற்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க கவுரவம் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
