சென்னை: குரூப் 2 தேர்வு ரத்துக்கு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இனிமேல் தவறு நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தமிழ்நாடு முழுவதும் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. தொழில்நுட்ப கோளாறு என ஒற்றை வரியில் தப்பிக்க முயல கூடாது. இந்த தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: டி.என்.பி.எஸ்.சி காட்டும் அலட்சியப்போக்குக்கு அளவே இல்லை என்பதற்கு இன்றைய குளறுபடியும் உதாரணம். குளறுபடிகளுக்கு காரணமானவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அரசு வெளிப்படையாக அறிவித்து இளைஞர்களுக்கு தேர்வாணையம் மீது நம்பிக்கை பொய்த்துவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: நிர்வாக குளறுபடிகள் காரணமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு தேர்வுக்கு தயாரான நிலையில் ரத்து என்பது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வை நடத்துவதில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் தேர்வு எப்போது நடத்தப்படும் என்பதை உரிய அவகாசத்துடன் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிக்க வேண்டும். இனிமேல் இப்படியொரு தவறு நடக்காமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும்.
விஜய் (தவெக தலைவர்): அரசுப் பணி என்பது, இளைஞர்கள் ஒவ்வொருவரின் உயரிய கனவும் லட்சியமும் ஆகும். அதை அடைய அவர்கள் பல ஆண்டுகளாக இரவு பகலாகக் கண்விழித்துப் படித்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவார்கள். அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உழைப்புடன் தயாராகி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமது எதிர்கால வாழ்வு குறித்த மிகப் பெரிய கனவுகளோடு முதன்மைத் தேர்வை எழுத வருவார்கள். அந்த நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டால், இவ்வளவு காலம் உழைத்த உழைப்பு வீணாகி விடுமோ என்ற அச்சம் அவர்களின் மனத்தில் ஆழப் பதிந்துவிடும்.
ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்பட்டாலும் அதற்காக மீண்டும் மீண்டும் தங்களது கடின உழைப்பை முதலீடாக்கும் சூழல் உருவாகும். இதனால் இளைஞர்களின் பெறற்கரிய காலம் வீணாவதுடன் மனத்தளவில் அவர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும். எனவே, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
