சென்னை: தமிழ்நாடு கம்மா சங்கங்களும், கம்மா குளோபல் பெடரேஷனும் இணைந்து கம்மா உலக அளவிலான கூட்டமைப்பின் சார்பில் கம்மா மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் நேற்று மாநாடு நடைபெற்றது. கம்மா குளோபல் பெடரேஷன் தலைவரும், நிறுவனருமான ஜெட்டி குசுமா குமார் தலைமை வகித்தார்.
இதில், திருப்பதி, திருமலை தேவஸ்தான சேர்மன் பி.ஆர்.நாயுடு, நடிகர் பாக்யராஜ், மணி நாயுடு, வெங்கட விஜயன், ரேவெல்ல பாஸ்கர நாயுடு, கட்ரகட்ட பிரசாத், தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், தனபால் நாயுடு, டி.ஆர்.எஸ்.சுப்பிரமண்யம், ஆதிசேஷையா, வட்லமுடி திலீப்குமார், தெலங்கானா மாநில கம்மா சங்கல சமக்யா தலைவர் பொட்டு ரவி கங்கர ராவ், கொடலி வெங்கட சுப்பாராவ், தெலங்கானா முன்னாள் எம்.பி., விஸ்வநாதன் பெருமாள், சல்ல ராஜேந்திரபிரசாத், மெடசனி மோகன், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி துணை தலைவர் இந்திராணி சுப்பிரமணி உள்பட பலர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
இந்த மாநாட்டில், கம்மா பெண்களின் அதிகார சம பங்களிப்பு, கம்மா இளைஞர்களின் அரசு உயர் பதவி வேலைவாய்ப்புகளில் சம உரிமை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி துறையில் சம ஒதுக்கீடு, அரசியலில் சம உரிமை, கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நல்லிணக்கத்தின் அவசியம், மருத்துவம், நீதித்துறைகளில் சம உரிமை மற்றும் சம பங்களிப்பு வழங்குவது குறித்து வலியுறுத்தபட்டது. முன்னதாக குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை கலந்து கொண்டு பேசுகையில், ‘‘உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களாக உள்ளனர். இந்த மாநாடு மூலம் உங்கள் சமூகத்திற்கு வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து நிறைவேற்றப்படும்’’ என்றார்.
