சாகித்ய அகாடமி விருது திடீர் நிறுத்தம் கம்பி கட்டும் கதை விடாதீங்க: ஒன்றிய அமைச்சருக்கு மதுரை எம்பி கண்டனம்

 

மதுரை: சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு திடீரென நிறுத்தப்பட்டது பற்றி, ‘கம்பி கட்டும் கதை விடாதீங்க’ என்று ஒன்றிய அமைச்சருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. விருதுப்பட்டியலை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதமே காரணம் எனவும், ஒன்றிய அரசின் தலையீட்டால்தான் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விருதுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது எழுத்தாளர்கள், கலைஞர்கள் மத்தியில் பெரும் கண்டனத்தை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாகித்ய அகாடமி விருதுகள் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து, ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பி இருந்தார்.

அதில், ‘சாகித்ய அகாடமி அதன் நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி 2025ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று எழுதி இருந்தார். இதற்கு ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அனுப்பிய பதில் கடிதத்தில், ‘உங்கள் கடிதம் கிடைத்தது. இந்த கோரிக்கை, விதிகளின்படி தேவையான நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என தெரிவித்திருந்தார்.

இந்த பதிலுக்கு கண்டனம் தெரிவித்து, மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில், ‘‘சாகித்ய அகாடமி விருதுகள் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்த எனது கடிதத்திற்கு தேவையான நடவடிக்கைகளை விதிகளின் படி மேற்கொள்ள பரிந்துரைத்திருப்பதாக ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் பதிலளித்திருக்கிறார். கம்பிகட்டும் கதையெல்லாம் சொல்லும் கஜேந்திர சிங் அவர்களே, உங்கள் அமைச்சகத்தின் தலையீடே விதிகளுக்கு எதிரானது தான். எனவே உங்களின் தலையீட்டை திரும்பப்பெறுக. நடுவர்குழு முடிவுகளை அறிவித்திடுக’’ என பதிவிட்டுள்ளார்.

Related Stories: