தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி, வினாத்தாள் வர தாமதத்தால் தமிழகத்தில் குரூப் 2, 2ஏ மெயின் தேர்வு ரத்து

 

* ஒரு சில இடங்களில் தேர்வர்கள் மறியல் போராட்டத்தால் பரபரப்பு
* வேறு தேதியில் தேர்வு நடக்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடக்க இருந்த குரூப் 2, 2ஏ மெயின் தேர்வில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டது. இதனால் நேற்று நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 15ம் தேதி வெளியிட்டது.

குரூப் 2 பணியில் 50 இடங்கள், குரூப் 2ஏ பதவியில் 595 இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வு எழுத 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 பேர், பெண்கள் 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பேர், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் அடங்குவர்.

இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பர் 28ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 4.18 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து கடந்த டிசம்பர் 22ம் தேதி குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதற்கிடையில் குரூப் 2, குரூப் 2 பதவிக்களுக்கான காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 828 ஆக டிஎன்பிஎஸ்சி உயர்த்தியது.

தொடர்ந்து இவர்களுக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 8ம்தேதி(நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று இத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. காலையில் நடைபெற இருந்த தேர்வை 9233 பேரும், பிற்பகலில் நடைபெற இருந்த தேர்வை 9244 பேரும் எழுத இருந்தனர். இதற்காக தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

சென்னையை பொறுத்தவரை திருவல்லிக்கேணி மாநில கல்லூரி, நந்தனம் அரசு கலைக்கல்லூரி, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிகளில் 7 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை குரூப்-2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் சென்னை அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரியில் குழப்பம் அரங்கேறியது. இந்த தேர்வு மையத்தில் மொத்தம் 600க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வந்திருந்தனர். ஆனால் அந்த 600 பேர்களில் வெறும் 200 பேர் மட்டுமே தான் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

மீதியுள்ள 400 தேர்வர்களுக்கு அரும்பாக்கம் கல்லூரி தான் தேர்வு மையம் என ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த தேர்வர்களின் பதிவு எண்கள் அங்கு உள்ள பட்டியலில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது உங்களுக்கு நந்தனம் கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு சென்று தேர்வு எழுதுமாறு தெரிவித்தனர். இதை கேட்டு தேர்வு எழுத வந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் தேர்வர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தை விலக்கி கொண்டனர்.

அதே போல சென்னை திருவல்லிக்கேணி மாநில கல்லூரியில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வை காலை, மாலை என மொத்தமாக 821 பேர் தேர்வு எழுத இருந்தனர். ஆனால் தேர்வு மைய முகவரி மற்றும் இட ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டது. காலை 9 மணி ஆகியும் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான தேர்வர்கள் மட்டுமே மையத்திற்குள் வந்து சேர்ந்தனர். மீதமுள்ள நூற்றுக்கணக்கான தேர்வர்கள் தங்களது மையத்தைக் கண்டறிவதில் ஏற்பட்ட சிரமத்தால் கடும் அவதிக்குள்ளாகி தடுமாறினர்.

இதேபோன்று நந்தனம் அரசு கல்லூரி தேர்வு மையத்திற்கு காலை 9 மணி வரை வினாத்தாள் வரவில்லை. இதனால், தேர்வு எழுத வந்த மாணவர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இதைப்போல பல்வேறு தேர்வு மையங்களில் குளறுபடி ஏற்பட்டது. ஆனால் மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல தேர்வு நடந்து கொண்டிருந்தது. தேர்வர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். இந்த நிலையில் தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் குளறுபடி, வினாத்தாள் வருவதில் காலதாமதம், மாணவர்கள் போராட்டம் போன்ற காரணத்தை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்படுதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதையடுத்தே பல்வேறு பிரச்னைகளில் சிக்கிய மாணவர்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர். மேலும் தேர்வு நடந்த மையங்களிலும் தேர்வுகள் நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு: சென்னையில் முற்பகல், பிற்பகலில் நடைபெறவிருந்த குரூப் 2, குரூப் 2ஏ பிரதான தேர்வு(மெயின் தேர்வு) தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் உள்ள 3 மையங்களில் நடத்த இயலவில்லை. எனவே தேர்வர்கள் நலனை முன்னிட்டு இன்று(நேற்று) நடைபெறவிருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. பின்னர் வேறு தேதியில் தேர்வு நடத்தப்படும்.

இது குறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விவரம் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் மின்னஞ்சல் (மின்னஞ்சல்) மூலம் தகவல் அளிக்கப்படும். எதிர்வரும் 22ம் தேதி முற்பகலில் நடைபெறவுள்ள குரூப் 2 பொது அறிவு தேர்வு அன்றைய தினமே நடத்தப்படும். இது தொடர்பாக தேர்வர்களுக்கு மீண்டும் சரிபார்த்து (ஹால்டிக்கெட் மீண்டும் வரும் 13ம் தேதி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வை நடத்துவதில் குளறுபடி, தேர்வு ஒத்திவைப்பு என்பது தேர்வுக்கு தயாராக இருந்த மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

* தேர்வு மையத்திலிருந்து வெளியே வர மறுப்பு

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 327 பேர் இந்த தேர்வினை எழுதுவதற்கு பாளையில் உள்ள ஒரு மையம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் நடந்த தேர்வு குளறுபடி காரணமாக தமிழ்நாடு முழுமைக்கும் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து நெல்லை தேர்வு மையத்தில், தேர்வெழுதிக் கொண்டிருந்த 304 நபர்களிடமும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதற்கான அறிவிப்பு முதலில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை அறிந்த தேர்வர்கள் மிகவும் குழப்பத்திற்கு உள்ளாயினர். ஆனால் தேர்வு மையத்தில் இருந்து வெளியேற அவர்கள் மறுத்தனர். தேர்வு வினாத்தாள் கொடுக்கப்பட்டு பாதி தேர்வு எழுதி முடிக்கப்பட்டு விட்டதாகவும், அதனை விட்டு விட்டு வெளியேறுவதற்கு நாங்கள் தயார் இல்லை என்றும் தெரிவித்தனர். இதனை பயிற்சித் தேர்வாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் எனக் கூறிவிட்டு மீண்டும் தேர்வு எழுத தொடங்கினர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான அறிவிப்பை தேர்வு மைய வாசலில் அதிகாரிகள் ஒட்டினர். அப்போது வாசலில் தேர்வு எழுதுவோருடன் வந்திருந்த உறவினர்கள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் விழித்தனர். இதுகுறித்து தேர்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தேர்வு மையத்திலிருந்து தேர்வர்கள் வெளியே வர மறுப்பு தெரிவிப்பதாகவும், இதனை பயிற்சி தேர்வாக எடுத்துக் கொள்கிறோம் என சொல்லிவிட்டு தேர்வை தொடர்ந்து எழுதுவதாகவும்’ தெரிவித்தனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

* 1 மணிநேரம் தேர்வு எழுதிய தேர்வர்கள் வெளியேற்றம்

தமிழ்நாடு முழுவதும் 8ம்தேதி (நேற்று) டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திருச்சியில் தந்தை பெரியார் ஈவெரா கல்லூரி தேர்வு மையத்திற்கு திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 380 தேர்வர்கள் காலை 9 மணி முதல் தேர்வு எழுத ஹால் டிக்கெட்டுடன் வரத்துவங்கினர். இவர்கள், சோதனைக்கு பின்னர் 9.30 மணியளவில் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கேள்வித்தாள் மற்றும் ஓ.எம்.ஆர் ஷீட் வழங்கப்பட்டு தேர்வு துவங்கியது. அப்போது குளறுபடி காரணமாக தமிழகம் முழுவதும் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதையறிந்து தேர்வு மையத்துக்கு வெளியில் காத்திருந்த பெற்றோர் மையத்துக்குள் நுழைந்து, தேர்வு ரத்து என கூறப்படுவது குறித்து கேட்டுள்ளனர். இதுகுறித்து எங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தால் மட்டுமே நாங்கள் தேர்வை ரத்து செய்வோம் என தேர்வு நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் குழப்பமான சூழல் நிலவியது.

இந்த குழப்பத்துக்கு மத்தியில் தேர்வர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேர்வு எழுதியநிலையில் தேர்வு கண்காணிப்பாளர்கள் தேர்வு ரத்து குறித்த செய்தியை உறுதிப்படுத்தினர். பின்னர், தேர்வர்களிடமிருந்து வினாத்தாள்கள் மற்றும் ஓஎம்ஆர் ஷீட்டுகளை திரும்ப பெற்று கொண்டு அவர்களை வெளியே அனுப்பினர். தேர்வு மையத்திற்கு வெளியே வந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து தேர்வு மைய கண்காணிப்பாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

* டிஎன்பிஎஸ்சி கட்டுப்பாட்டு அலுவலர் அதிரடி மாற்றம்

குரூப்-2, 2ஏ தேர்வுகள் குளறுபடி காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கட பிரியா என்பவர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் நேற்று இரவு தகவல்கள் வெளியாகின.

Related Stories: