சென்னை: தமுமுக மாணவரணியான சமூகநீதி மாணவர் இயக்கத்தின் வெள்ளி விழா மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாணவர் இயக்க மாநில செயலாளர் கோவை அம்ஜத் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஆவடி அ.அஜீஸ் வரவேற்றார். தமுமுக பொருளார் ஷபியுல்லாஹ்கான் வெள்ளி விழா மலரை வெளியிட்டார். மமக பொருளாளர் கோவை இ.உம்மர் சிறுவர் பிரிவை அறிமுகம் செய்தார்.
மாநாட்டில் தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமுமுக பொதுச்செயலாளர் ஜெ.ஹாஜாகனி, மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது எம்எல்ஏ., விஐடி வேந்தர் கோ.விஸ்வநாதன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில், தற்போது உள்ள சூழ்நிலையில் முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தனி இடஒதுக்கீட்டை 5% தமிழக அரசு உயர்த்த வேண்டும். கட்டாயக் கல்வி கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். மாணவர்கள் கையொப்பத்தையும் பெயரின் முன்னெழுத்தையும் தமிழுணர்வோடு தமிழிலேயே இடவேண்டும் என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
