என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்து ஒருங்கிணைப்பு கமிட்டி: பாஜ மேலிடம் திட்டம்

 

சென்னை: என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஒருங்கிணைப்புக் கமிட்டி அமைக்க பாஜ திட்டமிட்டுள்ளது. இதற்காக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் இன்று சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக(அன்புமணி), தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கட்சிக்கு அதிமுக தான் தலைமை என்றாலும் கூட்டணி விவகாரத்தில் பாஜவின் தலையீடு தான் அதிகரித்து உள்ளது. பெயரளவுக்கு தான் எடப்பாடி கூட்டணிக்குக்கு தலைமை வகித்து வருவதாக கட்சியினரே புலம்பி வருகின்றனர்.

இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் கூட்டணியில் இணைந்த அன்புமணியை சொல்ல வேண்டும். அவர் பாஜவிடம் தான் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஏற்பட்ட உடன்பாட்டை தொடர்ந்து அவர் எடப்பாடியை சந்தித்து பேசினார். டிடிவி தினகரனும் அப்படி. முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றி கொள்ள மாட்டேன். அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொள்வதற்கு பதிலாக நான் தூக்கில் தொங்கி கொள்வேன் என்று தனது அதிருப்தியை தெரிவித்தார். கடைசியில் அவருடனும் பாஜ தலைவர்கள் தான் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனால், தான் அவர் அதிமுக கூட்டணிக்கு வந்துள்ளார்.

அமித்ஷா சொன்னதால் தான் கூட்டணிக்கே வந்தேன் என்று வெளிப்படையாக டிடிவி கூறி வருகிறார். இன்னமும் அவர்கள் அதிமுக கூட்டணி என்று சொல்லவில்லை. பாஜ கூட்டணி என்று தான் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். கூட்டணி விவகாரத்தில் பாஜவின் தலையீடு தான் இருந்து வருகிறது. தொடர்ந்து கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் தான் ெதாகுதியை ஒதுக்கீடு செய்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் கூட்டணியில் கட்சிகளை இணைக்க பாஜ சார்பில் குழு அமைத்து பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

அதிமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அப்படி எதுவும் குழுவை அமைக்கவில்லை என்று நயினார் பல்டி அடித்தார். கூட்டணி விவகாரத்தில் அதிமுகவின் பங்கு என்பது துளி கூட இல்லை என்று சொல்லப்படுகிறது. கூட்டணிக்கே இப்படி என்றால், வரும் நாட்களில் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ெதாகுதி ஒதுக்கீட்டையும் பாஜ தான் செய்யுமா? என்று அதிமுகவில் உள்ள உண்மையாக தொண்டர்கள் குழம்பி போய் உள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒரு புயலை டெல்லி பாஜ மேலிடம் கொண்டு வர உள்ளது.

இதற்கிடையில் சட்டசபை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க என்டிஏவில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து, ஒருங்கிணைப்புக் கமிட்டி அமைக்க பாஜ மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பாஜவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் இன்று சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வரும் அவர் பாஜ நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது கட்சியினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்க அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தின் போது ஒருங்கிணைப்புக் கமிட்டி இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. பாஜவின் இந்த முயற்சி அதிமுகவுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: