சென்னை: சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவுவியதால் சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர், ஐதராபாத், துபாய், புனே உள்ளிட்ட 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, கோவை, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியிலிருந்து, கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலைய பகுதிகளிலும் கடுமையான மூடுபனி சூழ்ந்ததால் சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை தெளிவாகத் தெரியாமல் விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தத்தளித்து விட்டு, பெங்களூரு, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
அதுபோல், காலை 6.35 மணிக்கு மும்பையில் இருந்து, 157 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 7 மணிக்கு மும்பையில் இருந்து 149 பயணிகளுடன் சென்னை வந்த ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 7 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து 174 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 7.10 மணிக்கு 160 பயணிகளுடன் புனேவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 7.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து 164 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம்,
காலை 7.15 மணிக்கு மும்பையில் இருந்து இருந்து 154 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 8 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து 162 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 8.15 மணிக்கு துபாயிலிருந்து 274 பயணிகளுடன் சென்னைக்கு வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 7 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தன. அதன்பின்பு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானங்களை பெங்களூரு, கோவை, திருப்பதி ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பினார்கள்.
அதோடு பெங்களூரு, ஐதராபாத், மும்பை, கோவை, திருவனந்தபுரம், இலங்கை உள்பட 12 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தத்தளித்து விட்டு தாமதமாக தரையிறங்கின. மேலும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களும் தாமதம் ஆகின. சென்னையில் இருந்து பெங்களூரு, ஐதராபாத், மும்பை, அந்தமான், திருச்சி, டெல்லி, துர்காபூர், புனே, கொல்கத்தா, கோவை, துபாய், இலங்கை, உள்ளிட்ட 21 விமானங்கள் கடுமையான பனிமூட்டம் காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றன.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் மூடுபனி காரணமாக, விமான சேவைகள் பாதிக்கப்பட்டு சுமார் 40 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் பெருமளவு கடும் அவதிப்பட்டனர். அதன்பின்பு காலை 9 மணிக்கு மேல் பனிமூட்டம் படிப்படியாக விலகி சூரிய ஒளி வீசத் தொடங்கியதும் விமான சேவைகள் சகஜ நிலைக்கு திரும்பின. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், ‘‘சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 6.30 மணியிலிருந்து திடீரென கடும் பனிமூட்டம் ஏற்பட்டதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
பயணிகள் பாதுகாப்பு கருதி சில விமானங்கள் பெங்களூரு, திருப்பதிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை விசுபிலிட்டி 1,500 மீட்டர் ஆக இருந்தது, காலை 6.30 மணிக்கு 350 மீட்டராகவும், காலை 7.30 மணிக்கு 150 மீட்டராகவும் குறைந்து விட்டதால், பாதுகாப்பு நலன் கருதி விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதிக்காமல், திருப்பி அனுப்பப்பட்டன. நேற்று காலை 9 மணிக்கு மேல் நிலைமை சீரடைந்து, விமான சேவைகள் சகஜ நிலைக்கு திரும்ப தொடங்கின’’ என்றார்.
