20 அணிகள் பங்கேற்கும் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் இன்று தொடக்கம்: முதல் போட்டியில் பாகிஸ்தான்-நெதர்லாந்து மோதல்

மும்பை: 20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போடடியில் பாகிஸ்தான்-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10வது ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துகின்றன. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ,பி,சி,டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது.

ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளும், சி பிரிவில் இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்கார்ட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், டி பிரிவில் ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்ஆப்ரிக்கா, யுஏஇ அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது. இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை ஆகிய இடங்களிலும், இலங்கையில் கொழும்பு, பல்லேகலே ஆகிய இடங்களிலும் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன.

இன்று தொடங்கும் இந்த தொடரில் வருகிற 20ம் தேதி வரை லீக் சுற்று நடக்கிறது. சூப்பர் 8 சுற்று 21ம் தேதி முதல் மார்ச் மாதம் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 4ம் தேதி முதல் அரையிறுதி, 5ம் தேதி 2வது அரையிறுதி போட்டி நடக்கிறது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் முதல் அரையிறுதி கொழும்பில் நடக்கும். இல்லையென்றால் இந்தியாவில் நடத்தப்படும். 2வது அரையிறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் நடக்கும். இல்லையெனில் அகமதாபாத்தில் மார்ச் 8ம் தேதி நடத்தப்படும். லீக் சுற்றில் தினமும் 3 போட்டிகளும், சூப்பர் 8 சுற்றில் தினமும் 2 போட்டிகளும் நடக்கிறது. இன்று முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கின்றன.

கொழும்பில் காலை 11 மணிக்கு முதல் போட்டியில் ஏ பிரிவில் பாகிஸ்தான்-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. மாலை 3 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் வெஸ்ட்இண்டீஸ்-ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளன. இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா, அமெரிக்காவுடன் மோத உள்ளன.

* சேப்பாக்கம் போட்டிகள்
சென்னை சேப்பாக்கம் எம்.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 6 லீக் போட்டிகள் மற்றும் ஒரு சூப்பர் 8 சுற்று போட்டி நடைபெற உள்ளது. இதில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா பங்கேற்கும் போட்டியாக இருக்கலாம் என தெரிகிறது. நியூசிலாந்து லீக் சுற்றில் 3 போட்டியை சேப்பாக்கத்தில்தான் ஆட உள்ளது.

* பாக். அணியுடன் விளையாட தயார்
இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் அளித்த பேட்டி: எங்களுடைய மனநிலை மிகவும் தெளிவாக உள்ளது. பாகிஸ்தானுடன் ஆட மாட்டோம் என்று நாங்கள் சொல்லவே இல்லை. அந்தப் பக்கம் இருந்துதான் மறுப்பு வந்துள்ளது. ஐசிசி எங்களுக்கு ஒரு அட்டவணையைத் தந்துள்ளது. அரசாங்கமும் பொதுவான இடத்தில் விளையாட ஒப்புதல் அளித்துள்ளது. அதனால், நாங்கள் விளையாட தயாராகவே இருக்கிறோம். நாங்கள் கொழும்பு செல்வதற்கான விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. நாங்கள் அங்குச் செல்கிறோம். அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

* ஹேசில்வுட் அவுட்
டி20 உலகக் கோப்பை போட்டி தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தொடை தசைநார் பிரச்னை காரணமாக விலகியுள்ளார். இந்த வார தொடக்கத்தில் காயத்தால் மற்ெறாரு வேகப்பந்து வீச்சாளரான பாட் கம்மின்ஸ் விலகிய நிலையில் தற்போது ஹேசில்வுட்டும் விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அந்த அணி பென் டுவார்ஷுயிஸ், சேவியர் பார்ட்லெட் ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு களத்தில் இறங்குகிறது. வேகப்பந்து வீச்சாளர் அபோட் ரிசர்வ் வீரராக அணியில் இருந்தாலும் மாற்று வீரரை ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் இன்னும் முடிவு செய்யவில்லை.

* ராணா வெளியே சிராஜ் உள்ளே
இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வேகபந்து வீச்சாளர் ஹர்ஹித் ராணா, தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் போது, வலது முழங்கால் முட்டியில் காயமடைந்தார். இதனால், டி.20 உலககோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஹர்ஹித் ராணாவிற்கு பதிலாக அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories: