தமிழக பாஜ மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் அளித்த பேட்டி: தவெக தொடங்கி மூன்றாம் ஆண்டா, இரண்டாம் ஆண்டா என்று ஒரு சந்தேகத்துடன் தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். விஜய் தமிழில் பேசும் போது இரண்டாம் ஆண்டு என்கிறார். இங்கிலிசில் பேசும் போது மூன்றாவது ஆண்டு என்று சொல்கிறார். எத்தனை ஆண்டாக கட்சி நடத்துகிறார் என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவர் பனையூரை வீட்டே இன்னும் வரவில்லை. ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்தால் எப்படி சினிமாவில் வசனம் படித்து பேசுவாரோ? அதே போல திருக்குறளை பேசி விட்டார்.
பிரஸ்காரர்கள் அவரிடம் போய் திருக்குறளுக்கு அர்த்தம் கேட்டால் தெரியாது. எத்தனை திருக்குறள் இருக்கிறது என்று தெரியாத நபர் விஜய். நடிகராக இருந்து, ஜெயித்து அரசியலுக்கு வந்து விடலாம் என்ற எண்ணம் எப்போதும் தமிழ்நாட்டில் பலிக்க போவது கிடையாது. ஒரு அரசியல் கட்சி மேடையில் கூட ஒரு நடிகராக மாறி குத்தாட்டம் தான் ஆடுகிறாரே தவிர, மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க தயாராக இல்லை. நான் திமுகவை எதிர்ப்பேன், பாஜவை எதிர்ப்பேன் என்று இருந்து கொள்ளுங்கள்.
உங்களால் மக்களுக்கு என்ன நடக்க போகிறது. எதை எதிர்த்து குரல் கொடுக்க போகிறீர்கள். எதுவுமே சொல்லாம 3 வருடம் கட்சி நடத்தியது தவெக தான் என்ற பெருமை அந்த கட்சிக்கும், அதன் தலைவருக்கும் சென்றடையும். கரூர் சம்பவத்தில் சிபிஐ வழக்கு வேண்டும் என்று கேட்டதே தவெக தான். இப்போது எங்களுக்கு சிபிஐயால் அழுத்தம் இருக்கிறது என்று சொல்வது ஏற்புடையது கிடையாது.
ஸ்டார் ஓட்டலில் கட்சி நடத்தி, கான்பரன்ஸ் ஹாலுக்குள் மீட்டிங் போட்டு இதுவே அரசியல் என்று சொல்லக்கூடிய நபர், நாளைக்கு வந்து தலைமைச் செயலகத்தையே போர் சீசன்ஸ் ஓட்டலுக்கு மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. கூட்டணி வரும், கூட்டணி வரும் என்று இலவு காத்த கிளியாக இருந்த தவெகவுக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றம் மட்டும் தான்.
கடைசியில் பாத்தீர்கள் என்றால், ரிட்டயர்மென்ட் ஹோம் மாதிரி செங்கோட்டையன் போன்றவர்கள் தான் போய் சேர்ந்து இருக்கிறார்கள். இளைஞர்கள் யாருமோ வந்து ஆர்வமா போய் சேர்றததை பார்க்க முடியவில்லை. இப்போதும் கூட வந்து, வெறுமனே ஒரு ரசிகர் மன்றம் தான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் கட்சியாக தவெகவை இன்னும் மக்கள் பார்க்க தொடங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
