3,461 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் தூத்துக்குடியில் இருந்து ரயிலில் வந்தது திருவண்ணாமலை மாவட்டத்துக்கு

திருவண்ணாமலை, பிப்.5: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு, 3461 மெட்ரிக் டன் யூரியா உள்ளிட்ட உரம் தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பாசனத்தக்கு தேவையான தண்ணீர் இருப்பதால், தற்போது பின் சம்பா பருவ நெல் சாகுபடி பரவலாக நடந்து வருகிறது. அதையொட்டி, விவசாய தேவைக்கான உரம் கையிருப்பில் வைக்கப்பட்டு, தேவையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்க வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான யூரியா 1146 மெட்ரிக் டன், டிஏபி 421 மெட்ரிக் டன், காம்பளக்ஸ் 786 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1108 மெட்ரிக் டன் உள்பட மொத்தம் 3461 மெட்ரிக் டன் உரம் தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலம் திருவண்ணாமலைக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அதனை, வேளாண் இணை இயக்குநர் கண்ணகி மற்றும் வேளாண் அலுவலர் (தரக்கட்டுப்பாடு) குமரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து, ெகாள்முதல் செய்யப்பட்ட உரங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனை நிலையங்களுக்கும் பிரித்து லாரிகள் மூலம் அனுப்பப்பட்டது,

மேலும், இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் கண்ணகி தெரிவித்ததாவது: நடப்பு மாதத்திற்கு தேவையான யூரியா 9216 மெ.டன், டிஏபி 2584 மெ.டன், பொட்டாஷ் 1655 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1582 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 3516 மெ.டன் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவிமூலம் ரசீது பெற்று பயன்பெறலாம். தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலான விலைக்கு விற்பனை செய்வது அல்லது இதர இடுபொருட்களை வாங்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பது போன்ற புகார்கள் உறுதி செய்யப்பட்டால் உர கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: