நத்தம், பிப். 4: நத்தம் அருகே செந்துறை சந்தைப்பேட்டையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பகத்சிங் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது, உதவித்தொகையினை உயர்த்துவது என எந்த ஒரு சாதகமான அறிவிப்பும் வெளியிடாத ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் சுகாதகர், கருப்பசாமி, சின்னையா மற்றும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
