மதுரை, பிப். 4: அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு, பணிமேம்பாட்டு ஊதியத்துடன் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான மூட்டா சார்பில் மாநில அளவில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று 9வது நாளாக இப்போராட்டம் தொடர்ந்தது.
இதன்படி மதுரைகாமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த சமூக அறிவியல் கல்லூரி, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி, யாதவா கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்பு நேரம் தவிர்த்து ஓய்வு மற்றும் உணவு நேரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஏயூடி – மூட்டா வலியுறுத்தியுள்ளது.
