100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் 5ம் தேதி பிரமாண்ட நடைபயணம்: கே.சி.வேணுகோபால் பங்கேற்பு, தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை சிதைக்கும் நோக்கத்தோடு செயல்படும் பாஜ அரசை கண்டித்து நாளை மதியம் 2 மணியளவில் எனது தலைமையில் சென்னை, திருவள்ளூர், ஆவடி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் நடைபயணம், கிழக்கு தாம்பரம் – பாரதமாதா தெரு, வேளச்சேரி சாலை சந்திப்பில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலிருந்து, மேற்கு தாம்பரம் – சண்முகம் சாலை வரை நடைபெற உள்ளது.

தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலங்கானா மாநில துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்கள்.

நடைபயண நிகழ்ச்சியில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.ராஜேஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகியோர் பங்கேற்கிறார்கள். மாநில ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சி.மனோகரன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். மேலும், இந்த நடைபயண நிகழ்ச்சிகள் பிப்ரவரி 7ம்தேதி திருச்சியிலும், 8ம்தேதி திண்டுக்கல்லிலும், 9ம்தேதி தென்காசியிலும், 12ம்தேதி கோவையிலும் நடைபெறுகிறது.

Related Stories: