தென்மாவட்டங்களில் நாளை முதல் வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை

 

நெல்லை: தென்மாவட்டங்களில் நாளை முதல் வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.தென்மாவட்டங்களில் பிசான சாகுபடி முடிந்த நிலையில், கோடை காலம் தொடங்கும் தருவாயில் உள்ளது. மார்ச் மாதத்தில் ஓரளவுக்கு வெயில் நிலவினாலும், அவ்வப்போது பெய்த வெப்பசலன மழை குடியிருப்புகளை குளிர்வித்தது.

மார்ச் 1ம் தேதி முதல் தற்போது வரை தமிழகத்தில் இயல்பான வெப்பநிலையே பதிவாகி வருகிறது. இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து, இம்மாத இறுதியில் மாநிலத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெயில் உச்சகட்டமாக செல்லும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடுமையாக வெப்பநிலை உயரும். தமிழகத்தின் வெப்பநிலை படிப்படியாக உயர இருப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கவும்.

மலையேற்றத்தையும் தவிர்க்கும்படியும் தென்காசி தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெப்பநிலை மெல்ல மெல்ல உயர்ந்து வருவதால், குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

Related Stories: