ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே தேவலாம்பாபுரம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தேவலாம்பாபுரத்தில் இருந்து புதூர்மேடு செல்லும் சாலை 2 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. இதனால், குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சாலை ஆந்திர மாநிலம் பாலசமுத்திரம் வரை செல்லக்கூடிய முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. இப்பகுதி மக்கள் சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, சித்தூர், பொன்னை மற்றும் திருத்தணி ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தேவலாம்பாபுரம் கிராமத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் புதூர்மேடு பகுதிக்கு சென்றுதான் பேருந்து வசதி பெற முடியும். தற்போது சாலை முழுவதும் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு நீர் தேங்கி நிற்பதால் பைக்கில் செல்வதுகூட சவாலாக மாறியுள்ளது. கிராமத்திற்கு உயிர்நாடியாக உள்ள சாலை மிகவும் மோசமாக இருப்பதால் மருத்துவ தேவைக்கு ஆம்புலன்ஸ்கூட சரியான நேரத்திற்கு வரமுடிவதில்லை.
கர்ப்பிணி பெண்களையும், முதிய வர்களையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது ஆபத்தான நிலையுள்ளது. எனவே, இந்த பகுதியின் போக்குவரத்து முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு குண்டும் குழியுமான தேவலம்பாபுரம்-புதூர்மேடு சாலையை தார்சாலையாக மாற்றவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
