நத்தம்: நத்தம் அருகே, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் 50 ஆடுகளை பலியிட்டு 5 ஆயிரம் பேருக்கு கறிவிருந்து பிரசாதமாக வழங்கப்பட்டது. அனைவரும் பாத்திரங்களில் வாங்கிச் சென்று வீடுகளில் குடும்பத்தாரோடு உண்டு மகிழ்ந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே, உலுப்பக்குடி கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் விழா எடுப்பர். ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த விழாவில் ஆட்டு கிடாக்களை பலியிட்டு கமகம கறிவிருந்து தயார் செய்து பிரசாதமாக வழங்குவர்.
இந்நிலையில், இந்தாண்டு திருவிழாவையொட்டி வேட்டைக்காரன் சுவாமிக்கு நேற்றிரவு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதையடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாக்கள் சுவாமிக்கு பலியிடப்பட்டு 750 கிலோ அரிசியில் விடிய, விடிய கறிவிருந்து தயாரானது. பின்னர் காலையில் சுவாமிக்கு கறிவிருந்து படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில், ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுடச்சுட கறி விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அனைவரும் பாத்திரங்களில் வாங்கிச் சென்று குடும்பத்தாருடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இந்த விழாவில் உலுப்பக்குடி, காட்டுவேலம்பட்டி, குட்டூர், புன்னப்பட்டி, வேலாயுதம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
