வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த ஸ்குவாஷ் ஆன் பையர் ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த இளம் வீராங்கனை அனாஹத் சிங் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஸ்குவாஷ் ஆன் பையர் ஸ்குவாஷ் போட்டிகள் நடந்து வந்தன. இதன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் (17), காமன்வெல்த் விளையாட்டுகள் சாம்பியன் மற்றும் உலகின் 10ம் நிலை வீராங்கனையான, இங்கிலாந்தின் ஜார்ஜினா கென்னடி மோதினர். துவக்கம் முதல் ஜார்ஜினாவை திணறடிக்கும் வகையில் அற்புதமாக சுழன்றாடிய அனாஹத் சிங், முதல் செட்டை 12-10 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த அடுத்த இரு செட்களையும் 11-5, 11-7 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.
அதன் மூலம் 3-0 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடிய அனாஹத் சிங் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பிஎஸ்ஏ வெண்கல மட்டத்திலான போட்டியில் சாம்பியன் பட்டத்தை அனாஹத் சிங் முதல் முறையாக பெற்றுள்ளார். இதனுடன் சேர்த்து, அனாஹத் சிங், ஒட்டுமொத்தமாக, வெறும் 26 போட்டிகளில் ஆடி 15 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த வெற்றியை அடுத்து, உலகளவில் ஸ்குவாஷ் தரவரிசை பட்டியலில் 19வது இடத்தை அனாஹத் சிங் பிடித்து சாதனை படைத்துள்ளார். குறைந்த வயதில் டாப் 20க்குள் நுழைந்த முதல் ஆசிய வீராங்கனை அனாஹத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
