இஎப்எல் கால்பந்து: மேன் சிட்டி சாம்பியன்; 10 ஆண்டுகளில் 5வது பட்டம்

லண்டன்: இஎப்எல் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் நேற்று, மேன் சிட்டி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இங்கிலாந்தில் முன்னணி அணிகள் பங்கேற்கும் இங்கிலீஸ் கால்பந்து லீக் கோப்பை போட்டிகள் லண்டனில் நடந்து வந்தன. இதன் இறுதிப் போட்டியில் நேற்று, மேன் சிட்டி – ஆர்சனல் அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போடுவதில் தீவிர முனைப்பு காட்டினர். இருப்பினும் முதல் பாதியில் கோல் எதுவும் விழாததால், 2வது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக காணப்பட்டது.

போட்டியின் 60வது நிமிடத்தில் மேன் சிட்டி அணியின் நிகோ ஓரெய்லி தலையால் பந்தை முட்டி அட்டகாசமாக முதல் கோல் போட்டு கரவொலி பெற்றார். தொடர்ந்து வேகம் காட்டிய அவர் அடுத்த 4வது நிமிடத்தில் தன்னை நோக்கி கடத்தப்பட்ட பந்தை லாவகமாக மீண்டும் தலையால் முட்டி கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அதன் பின் இரு அணி வீரர்களாலும் கோல் போட முடியவில்லை. அதனால், 2-0 என்ற கோல் கணக்கில் மேன் சிட்டி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கடந்த 10 ஆண்டுகளில் 5வது முறையாக மேன் சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

Related Stories: