* ஸ்மித், வார்னருக்கு பயங்கரவாத மிரட்டல்
கராச்சி: பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) கிரிக்கெட் போட்டிகளில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வெளிநாட்டு வீரர்கள் ஆடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானை சேர்ந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழு ஜமாத் உல் அஹ்ரார் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், பிற நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை அனுப்ப வேண்டாம் என்றும், அவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் அதில் கூறப்பட்டது. இதனால், பாக். கிரிக்கெட் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகள் எழுந்தன.
* 901வது கோல் மெஸ்ஸி அசத்தல்
நியூயார்க்: எம்எல்எஸ் கால்பந்து போட்டி ஒன்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணியும், நியூயார்க் சிட்டி அணியும் மோதின. இப்போட்டியின் 4வது நிமிடத்தில் இன்டர்மயாமியின் கோன்ஸலோ லுஜான் அணியின் முதல் கோல் போட்டார். அதன் பின், 61வது நிமிடத்தில் மெஸ்ஸி, 74வது நிமிடத்தில் மிகேல், மயாமிக்காக கோல்கள் போட்டனர். இதன் மூலம் 3-2 என்ற கோல் கணக்கில் இன்டர்மயாமி வெற்றி பெற்றது. இந்த கோலுடன் சேர்த்து, மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் அடித்த கோல் எண்ணிக்கை 901 ஆக உயர்ந்துள்ளது.
* சிறந்த வீராங்கனை அருந்ததிக்கு விருது
துபாய்: கடந்த பிப்ரவரி மாதத்துக்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது, இந்திய மிதவேகப் பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டிக்கு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக இந்த விருது பெற அருந்ததி ரெட்டி தேர்வாகி உள்ளார். அதேபோல், பிப்ரவரி மாதத்துக்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருது, பாகிஸ்தான் துவக்க வீரர் ஷாகிப்ஸதா ஃபர்ஹானுக்கு வழங்கப்பட உள்ளது. ஆடவர் உலகக் கோப்பை டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடியதற்காக அவர், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
