மயாமி ஓபன் டென்னிஸ்: புயலாய் சுழன்ற சபலென்கா

மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று, பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் மயாமி நகரில் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்காவின் கேட்டி மெக்னலி மோதினர். போட்டியின் துவக்கம் முதல் துள்ளிக் குதித்து ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா எளிதில் புள்ளிகளை குவித்து 6-4 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை வசப்படுத்தினார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 2வது செட்டையும் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடிய அவர் காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தான் அணிக்காக ஆடி வரும் உலகின் 2ம் நிலை வீராங்கனை எலெனா ரைபாகினா – உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக் மோதினர். இப்போட்டியில் துவக்கம் முதல் அநாயாசமாக ஆடி புள்ளிகளை குவித்த ரைபாகினா, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

* அல்காரஸ் அதிர்ச்சி: செபாஸ்டியனிடம் சரண்டர்
மயாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் நேற்று ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவை சேர்ந்த உலகின் 36ம் நிலை வீரர் செபாஸ்டியன் கோர்டா களம் கண்டனர். முதல் செட்டில் சிறப்பாக ஆடிய செபாஸ்டியன் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். இருப்பினும் அடுத்த செட்டில் சிறப்பாக ஆடிய அல்காரஸ், 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டில் மீண்டும் அதிரடியாக ஆடி ஆதிக்கம் செலுத்திய செபாஸ்டியன் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டில் வென்றார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற செபாஸ்டியன் காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு முன்னேறினார். தோல்வியை தழுவிய அல்காரஸ், போட்டியில் இருந்து அதிர்ச்சியுடன் வெளியேறினார்.

Related Stories: