ஆசிய மகளிர் கால்பந்து ஜப்பான் சாம்பியன் ஆஸியை வீழ்த்தி அசத்தல்

 

சிட்னி: ஏஎப்சி ஆசிய மகளிர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் நேற்று, ஜப்பான் மகளிர், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். ஏப்சி ஆசிய மகளிர் கோப்பை கால்பந்து போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வந்தன. கடந்த 17ம் தேதி நடந்த அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, 2-1 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. அதேபோல், 18ம் தேதி நடந்த அரையிறுதியில் ஜப்பான் அணி, 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில், ஜப்பான்- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இறுதிப் போட்டி, சிட்னியில் உள்ள ஸ்டேடியம் ஆஸ்திரேலியாவில் நேற்று நடந்தது. போட்டியின் துவக்கத்தில் ஜப்பான் வீராங்கனைகள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். அதன் பயனாக, 17வது நிமிடத்தில் ஜப்பானின் மய்கா ஹமானோ அட்டகாசமாக பந்தை கடத்திச் சென்று அணியின் முதல் கோல் போட்டு அசத்தினார். அதன் பின் போட்டி முடியும் வரை இரு அணி வீராங்கனைகளால் கோல் போட முடியவில்லை. அதனால், 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற ஜப்பான் மகளிர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

 

Related Stories: