4வது ஆடவர் டி20; சொந்த மண்ணில் நொந்த நியூசிலாந்து: 19 ரன்னில் தென் ஆப்ரிக்கா வெற்றி

 

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நேற்று, தென் ஆப்ரிக்கா அணி 19 ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா ஆடவர் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 3 போட்டிகளின் முடிவில் நியூசி அணி, 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், 4வது டி20 போட்டி வெலிங்டன் நகரில் நேற்று நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா துவக்க வீரர் வியான் முல்டர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். மற்றொரு துவக்க வீரர் டோனி டிஜோர்ஸி உடன் இணை சேர்ந்த கானர் எஸ்டெர்ஹுசென் சிறப்பாக ஆடி 36 பந்துகளில் 57 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜோர்ஸி 23 ரன்னில் அவுட்டானார். பின் வந்த வீரர்கள் நிதானமாக ஆடியதால், 20 ஓவரில் தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது.

அதையடுத்து, 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் கெடேன் கிளார்க் 9, டிம் ராபின்சன் 32 ரன்னில் அவுட்டாகி மோசமான துவக்கம் தந்தனர். பின் வந்த வீரர்களில் டேன் கிளீவர் 26 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் மோசமாக ஆடி சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 18.5 ஓவரில் நியூசிலாந்து அணி, 145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், 19 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று, 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. தென் ஆப்ரிக்கா தரப்பில் கெரால்ட் கோட்ஸீ 3, ஓட்நீல் பார்ட்மேன், பிரிநேலன் சுப்ராயன், கேஷவ் மஹராஜ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்த அணிகள் இடையிலான கடைசி போட்டி வரும் 25ம் தேதி, கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெறுகிறது.

 

Related Stories: