சென்னை: சென்னையில் இன்று நடக்கும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், சென்னையின் எப்சி அணி, எப்சி கோவா அணியுடன் மோதவுள்ளது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. சென்னையின் எப்சி அணி, கடைசியாக, கடந்த 7ம் தேதி எர்ணாகுளத்தில் நடந்த கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. அதைத் தொடர்ந்து, சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில் சென்னையின் எப்சி – எப்சி கோவா அணிகள் மோதவுள்ளன. கேரள அணிக்கு எதிராக வெற்றி பெற்ற தெம்புடன் இன்று களம் காணும் சென்னை அணி, மீண்டும் வெற்றி நடை போட தீவிர முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை – கோவா அணிகள் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
அவற்றில் 18ல் கோவா வென்று பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. சென்னை அணி 9 போட்டிகளில் வென்றுள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. ஐஎஸ்எல் புள்ளிப் பட்டியலில் மும்பை சிட்டி அணி, 6 போட்டிகளில் 4ல் வென்று 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மோகன் பகான் அணி, 6ல் 4ல் வென்று 13 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. கோவா அணி 5ல் 2 போட்டிகளில் வென்று 9 புள்ளிகளுடன் 4ம் இடத்தை பிடித்துள்ளது. கோவா கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 2ல் வெற்றி, 3ல் டிரா பெற்றுள்ளது. மாறாக சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி ஒன்றில் வெற்றி, 2ல் தோல்வி, ஒன்றில் டிரா என, 4 புள்ளிகளுடன் 11ம் இடத்தில் உள்ளது.
