புதுடெல்லி: கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகளில் இருந்து இந்திய முன்னணி வீராங்கனை கொனேரு ஹம்பி விலகியதால், அவருக்கு மாற்றாக உக்ரைன் வீராங்கனை அன்னா முஸிசுக் அப்போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஈரான் – இஸ்ரேல் இடையே நடந்து வரும் போரால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மேற்காசியா கடலு்கு அப்பால் அமைந்துள்ள சைப்ரஸ் நாட்டில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் வரும் 28ம் தேதி துவங்கி ஏப்ரல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனை நடப்பு உலக செஸ் சாம்பியன் உடன் மோதுவர். இந்த போட்டிகளில் மகளிர் பிரிவில் பங்கேற்க இந்தியாவை சேர்ந்த முன்னணி வீராங்கனை கொனேரு ஹம்பி தகுதி பெற்றிருந்தார்.
ஆனால், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகளில் இருந்து கொனேரு ஹம்பி விலகினார். அதையடுத்து அவருக்கு மாற்றாக, உக்ரைன் வீராங்கனை அன்னா முஸிசுக், கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளார். கேண்டிடேட்ஸ் செஸ் ஆடவர் போட்டிகளில் முதலிடம் பெறும் வீரர், இந்தியாவை சேர்ந்த தற்போதைய உலக செஸ் சாம்பியன் குகேஷ் உடன், அடுத்த உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்காக மோதும் வாய்ப்பை பெறுவார். அதேபோல், மகளிர் பிரிவில் வெற்றி பெறும் வீராங்கனை, தற்போதைய உலக மகளிர் செஸ் சாம்பியனான சீனாவை சேர்ந்த சாம்பியன் ஜு வென்ஜுன் உடன் மோதுவார். கொனேரு ஹம்பி, உலக மகளிர் பிரிவு ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை இரு முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
