மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் நேற்று, உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஆன் லீயை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் மயாமி நகரில் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் நேற்று, பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஆன் லீயை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் இருவரும் சளைக்காமல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால், டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் சபலென்கா வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சுதாரித்து அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் அந்த செட்டை கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, ஆஸ்திரேலியா வீராங்கனை எமர்சன் ஜோன்சை, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் எளிதில் வீழ்த்தினார்.
