பெங்களூரு: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் நினைவாக பெங்களூரு மைதானத்தில் 11 இருக்கைகளை காலியாக விட கர்நாடக கிரிக்கெட் அசோசியேசன் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் டி 20 கிரிக்கெட் 18வது சீசன் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை முதன்முறையாக கைப்பற்றியது. 18 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியதால் அதன் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூனில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த அணி வீரர்களுக்கான பாராட்டு விழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கர்நாடக கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் குழுவினர் தொடர் முயற்சியால் மைதானத்தில் போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதற்காக மைதானத்தின் நுழைவுப் பகுதி அகலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக சின்னசாமி மைதானத்தில் 11 இருக்கைகளை காலியாக விட கர்நாடக கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் அவர்களின் நினைவாக கல்வெட்டு திறக்கவும், இந்த சீசனில் அனைத்து பயிற்சிகளின் போதும் வீரர்கள் 11ம் எண் கொண்ட ஜெர்சியையே அணியவும் திட்டமிடப்பட்டுள்ளது.
