தாம்பரம், ஜன.29: தாம்பரம் மாநகர ஊர்க்காவல் படையில் பணிபுரிய விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரம் மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 29 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 32 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊக்கமும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட, பொதுநலத் தொண்டில் ஈடுபாடுள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்: குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். அரசு பணியில் இருப்பவர்கள், தங்கள் துறை அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று சமர்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் அண்மையில் எடுக்கப்பட்ட 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படையினர்களுக்கு 45 நாட்கள், தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்திற்குப் பின், அவரவர் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள காவல் நிலையங்களில் பணிபுரிய அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு மாத ஊதியம் கிடையாது. பணி நாட்களுக்கு உண்டான தொகுப்பு ஊதியம் மட்டுமே வழங்கப்படும். மேற்கண்ட தகுதியுடையவர்கள், தங்கள் சுயவிபரங்கள் அடங்கிய படிவத்தை 31.1.2026 அன்று, மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை, ஊர்க்காவல்படை அலுவலகம், பதுவஞ்சேரி, சென்னை-126 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 9952255493, 7418375910 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
