தெப்பல் திருவிழா நெருங்கிய நிலையில் திருக்கழுக்குன்றம் கோயில் குளம் இன்னும் சீரமைக்கப்படாத அவலம்: கோயில் நிர்வாகம் அலட்சியம்  பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருக்கழுக்குன்றம்,ஜன.28: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் உலகத்தில் பிரசித்திபெற்ற சிவத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த மலைக் கோயிலின் அடிவாரத்திற்கு சற்று அருகாமையில் ‘‘சங்கு தீர்த்த குளம்” அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் மார்க்கண்டேய முனிவர் உலகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுக்கெல்லாம் சென்று அங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். அதன்படி திருக்கழுக்குன்றத்தில் மலை மீதுள்ள வேதகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வணங்கிச் செல்ல இங்கு வந்து, அடிவாரத்திற்கு அருகில் அமைந்துள்ள குளத்தில் நீராடிவிட்டு, மலை மீது அமர்ந்துள்ள வேதகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட எண்ணினார்.

அப்போது தீர்த்த நீரை மலை மீது எடுத்துச் செல்ல பாத்திரமில்லாததால் ‘‘உனக்கு அபிஷேகம் செய்து, வழிபட முடியவில்லையே’’ என்று இறைவனை மனமுறுகி கண்ணீர் மல்க அழுது துவண்ட நிலையில் மார்க்கண்டேய முனிவர் முன்பு குளத்தில் அலை வீச ஒரு சங்கு வந்து நின்றது. அந்த சங்கில் குளத்தின் புனித நீரை எடுத்துக்கொண்டு மலை மீதுள்ள வேதகிரீஸ்வரருக்கு மார்க்கண்டேய முனிவர் அபிஷேகம் செய்து மகிழ்ந்ததாக கூறப்படுகிறது. மார்க்கண்டேய முனிவருக்காக சங்கு பிறந்ததால் அக்குளம் ‘‘சங்கு தீர்த்த குளம்” என்று பெயர் பெற்று விளங்கி வருகிறது. சங்கு பிறந்த அப்போதிலிருந்து முறையே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குளத்தில் சங்கு பிறந்து வருகிறது.

மேலும் கும்பகோணம் ‘‘கும்பமேளா\” போன்று இங்கு சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் ‘‘புஷ்கர மேளா” நடந்து வருகிறது. மனநோய் உள்ளவர்கள் இக்குளத்தில் குளித்தால் குணமாகி விடும் என்றும், எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையின் பேரில் வெளிநாட்டவர் முதல் வெளி மாநிலத்தவர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், உள்ளூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் இக்குளத்தில் புனித நீராடி, இந்த நீரை தீர்த்தமாக தங்களது இல்லங்களுக்கும், உறவினர்களுக்கும் கொண்டு சென்று கொடுப்பார்கள்.

இப்படி சிறப்பு மிக்க இந்த சங்கு தீர்த்த குளத்தை கோயில் நிர்வாகம் முறையாக பராமரிக்காமலும், சரிவர கண்டு கொள்ளாமலும் உள்ளதால், சிலர் குளத்தில் துணி துவைப்பது, சோப்பு போட்டு குளிப்பது போன்ற அசுத்தப் பணிகளை செய்கின்றனர். சில நேரங்களில் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இது ஒருபுறமிக்க குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபத்தைச் சுற்றியும், குளத்தின் உள் பகுதியைச் சுற்றியும் புதர் மண்டி காணப்பட்டு வருகிறது. இதனால் குளத்தின் புனிதம் நாளடைவில் கெட்டு வருவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இத்தனை நாட்கள்தான் இதையெல்லாம் கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை, ஆண்டுதோறும் தை மாதத்தில் மிகவும் விமரிசையாக நடக்கின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் ‘‘தெப்பல் திருவிழா” வரும் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடை பெறவுள்ளது. ஆனாலும் கோயில் நிர்வாகம் குளத்தை முறையாக சுத்தம் செய்யாமல் பெயருக்கு சுத்தம் செய்துவிட்டு, முறையாக, சரியாக சுத்தம் செய்யாமல் வழக்கம்போல் கண்டு கொள்ளாமல் உள்ளனர். குளத்தின் வெளிப்புறத்தை திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நிர்வாகம் முறையாக சுத்தம் செய்து பராமரித்து வருகிறது.

குளத்தின் உள்புறம் கோயில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளதால் அதை கோயில் நிர்வாகம்தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் கோயில் நிர்வாகம் அதை செய்வதில்லை, பேரூராட்சி நிர்வாகம் சுத்தம் செய்ய முன் வந்தாலும் அதற்கு கோயில் நிர்வாகம் அனுமதியளிக்காமல் முரண்டு பிடித்து, அலட்சியம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே சில தினங்களே உள்ள தெப்பல் திருவிழாவிற்கு முன்பு புகழ் பெற்ற சங்கு தீர்த்த குளத்தை முறையாக சுத்தம் செய்து, சீரமைக்க வேண்டுமென்று பக்தர்களும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: