நெடுஞ்சாலைத்துறையும், வருவாய்த்துறையும் இணைந்து திருப்போரூர் – கூடுவாஞ்சேரி சாலையை அரசு வரைபடத்தில் சேர்க்க வேண்டும்: 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வலியுறுத்தல்

திருப்போரூர்.ஜன.26: நெடுஞ்சாலைத்துறையும், வருவாய்த்துறையும் இணைந்து திருப்போரூர் – கூடுவாஞ்சேரி சாலையை அரசு வரைபடத்தில் சேர்க்க வேண்டும் என்று 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் சாலை 29 கி.மீ. தூரம் கொண்டதாகும். இந்த சாலையில் இள்ளலூர், காட்டூர், அம்மாப்பேட்டை, நெல்லிக்குப்பம், கல்வாய், பாண்டூர், கன்னிவாக்கம், காயரம்பேடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த சாலையை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரிக்கிறது.

தற்போது ஓ.எம்.ஆர். சாலையும், ஜி.எஸ்.டி. சாலையும் சென்னை மாநகருக்கு இணையாக வளர்ச்சி அடைந்துவிட்டது. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களின் வழியாக சென்ற இச்சாலையை அகலப்படுத்த அப்போது சாலையை ஒட்டி விவசாய நிலங்களை வைத்திருந்த பலரும் தங்களுடைய நிலங்களை சாலையை அகலப்படுத்தும் பணிக்காக விட்டுக் கொடுத்தனர். இதன் காரணமாக 60 அடி அகல சாலை தற்போது உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் சென்று வருகின்றன. ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் வீட்டு மனைப்பிரிவுகள், மருத்துவக் கல்லூரி, கலைக்கல்லூரி என அபரிமிதமான வளர்ச்சியை இச்சாலை பெற்று வருகிறது. ஆனால் இந்த சாலையின் பல இடங்களில் வருவாய்த்துறை சார்பில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என பெயரிட்டு சாலையின் அகலம் குறிப்பிடப்படவில்லை. அதனால் பல்வேறு கிராமங்களின் ஊடாக செல்லும் இச்சாலை இன்றும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயரில் பட்டா தாக்கலாகி உள்ளது.

தற்போது இச்சாலையின் நில மதிப்பு உயர்ந்து விட்டதால் 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்தது போல் சாலைக்கு தங்களின் நிலங்களை விட்டுத்தர மனமில்லாத நிலை உள்ளது. இதன் காரணமாக தார் சாலையின் முனைப்பகுதியை ஒட்டி தங்கள் நிலத்திற்கான எல்லைக்கற்களை நட்டு பென்சிங் அமைத்து கம்பி வலை அமைக்கின்றனர். இதனால் இரவில் இச்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் இந்த சாலையோர தடுப்புக்கற்கள் மீது மோதி விபத்தை சந்திக்கின்றனர். ஆகவே, நெடுஞ்சாலைத்துறையும், வருவாய்த்துறையும் இணைந்து சாலையின் உண்மையான அகலத்தை வருவாய்த்துறை ஆவணங்களில் பதிவேற்றம் செய்து அவற்றை அரசு வரைபடத்தில் குறிப்பிட வேண்டும் என்றும், தேவைப்படும் இடங்களில் நில எடுப்பு செய்து சாலையை அரசுக்கணக்கில் கொண்டு வர வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: