கூடுவாஞ்சேரி, ஜன.29: கூடுவாஞ்சேரியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில், சர்வர் பழுதால் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் கடும் அவதிப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி, பெருமாட்டுநல்லூர், கன்னிவாக்கம், தர்காஸ், பாண்டூர், காரணைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால், கீரப்பாக்கம், முருகமங்கலம், நல்லம்பாக்கம், கண்டிகை, வேங்கடமங்கலம், ரத்தினமங்கலம், ஊனமாஞ்சேரி, ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் இங்கு பத்திர பதிவு செய்து வருவது வழக்கம்.
இந்நிலையில், தை மாதம் என்பதால் முகூர்த்த தினத்தை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவு செய்ய வந்திருந்தனர். மேலும், டாக்குமெண்ட் ரைட்டர்கள் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் நேற்று மணி கணக்கில் காத்திருந்தனர். இதில், நேற்று காலை முதல் மாலை வரை சர்வர் பழுதானதால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் வீட்டிற்குச் சென்றனர். பலர் புரோக்கர்கள் மூலம் பத்திரப்பதிவு நடக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். இதனால், கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
