திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணம்

திருப்போரூர், ஜன.29: சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில், நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், கிருத்திகை மற்றும் விசேஷ தினங்களிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.

மேலும், சுப முகூர்த்த நாட்களில் கோயிலில் திருமணம் நடத்தவும், மாடவீதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் திருமணங்களை நடத்தவும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இந்தநிலையில் ஜனவரி 28ம் தேதியான நேற்று, தை மாதத்தின் முதல் முகூர்த்தம் என்பதால், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மட்டும் பதிவு செய்யப்பட்ட 90க்கும் மேற்பட்ட திருமணங்களும், பதிவு செய்யப்படாமல் 50க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடைபெற்றன.
இது மட்டுமின்றி நான்கு மாடவீதிகள் மற்றும் பல்வேறு வீதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் அனைத்தும் புக்கிங் செய்யப்பட்டு, அவற்றில் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதனால், நேற்று முன்தினம் இரவு முதற்கொண்டே நான்கு மாடவீதிகளிலும் ஏராளமான கார்கள், வேன்கள், பேருந்துகள் அணி வகுத்தன. பலரும் தங்களது வாகனங்களை உரிய நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல் ஓ.எம்.ஆர். சாலை மற்றும் நான்கு மாடவீதிகளிலும் சாலையோரம் நிறுத்திவிட்டுச் சென்றனர்.

இதன் காரணமாக, ஓ.எம்.ஆர். சாலை மற்றும் நான்கு மாடவீதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக, போலீசார் நேற்று முன்தினம் இரவே வடக்கு மாடவீதி மற்றும் தெற்கு மாடவீதி ஆகியவற்றின் நுழைவு வாயிலில் தடுப்பு அமைத்து வாகனங்களுக்கு அனுமதி மறுத்தனர். கோயிலுக்கும், திருமண மண்டபங்களுக்கும் நடந்து செல்ல பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டனர். மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகளின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. கோயிலுக்கும், திருமண மண்டபங்களுக்கும் வரும் வாகனங்களை அதற்குரிய உரிய வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி பாதுகாக்க, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பேரூராட்சி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

திருத்தணியில் 65 திருமணம்: திருத்தணி முருகன் கோயிலில் நேற்று 65 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றது. அப்போது, காவடி மண்டபம், திருப்புகழ் மண்டபம் அருகில் தற்காலிக மண்டபங்களில் திருமண பந்தல்கள் அமைக்கப்பட்டு, ஹோம மந்திரங்கள் முழங்க திருமணங்கள் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் மற்றும் அவரது உறவினர்கள் சாமி தரிசனம் செய்ய ஆர்வம் காட்டினர்‌. இதனால், பொது வரிசை மற்றும் ரூ.100 சிறப்பு வரிசையில் ஏராளமானோர் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மலை கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், எந்த ஒரு தடையுமின்றி ஆட்டோக்கள் மலை கோயிலுக்கு சென்று வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மலைக்கு வந்ததால் சாதாரண பக்தர்கள் நடந்து சென்று வர கடும் அவதி அடைந்தனர்.

Related Stories: