மாமல்லபுரத்தில் தூய்மை மிஷன் குப்பை திருவிழா விழிப்புணர்வு

மாமல்லபுரம், ஜன.24: மாமல்லபுரத்தில் தூய்மை மிஷன் குப்பை திருவிழாவையொட்டி வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாமல்லபுரம் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம் சார்பில், தூய்மை மிஷன் குப்பை திருவிழா நிகழ்ச்சி நகராட்சி (பொ) ஆணையர் சேம் கிங்ஸ்டன் அறிவுரைப்படி நடைபெற்றது. தொடர்ந்து, நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று பிளாஸ்டிக் தீமைகள் குறித்தும், மக்கும்-மக்காத குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, தூய்மை மிஷன் திருவிழா விழிப்புணர்வு பேரணியை கடற்கரை கோயில் நுழைவு வாயில் அருகே, நகராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், கடற்கரை செல்லும் சாலை, கிழக்கு ராஜவீதி, கோவளம் சாலை வழியாக சென்று கடற்கரையொட்டி உள்ள ஒரு ஓட்டலில் பேரணி நிறைவு பெற்றது. பின்னர், மேளதாளம் முழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி, மேற்பார்வையாளர் சத்யா, நகராட்சி கவுன்சிலர்கள் லதா குப்புசாமி, ஜீவிதா தர், கெஜலட்சுமி கண்ணதாசன், சரிதா கோவிந்தசாமி, நகராட்சி பணியாளர்கள், ஹேண்ட் இன் ஹேண்ட் பணியாளர்கள், அரிமா சங்கத்தினர், லயன்ஸ் கிளப்பினர், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: